தமிழ் வாடு யின் அர்த்தம்

வாடு

வினைச்சொல்வாட, வாடி

 • 1

  (மரம், செடி, கொடி முதலியவை அதிக வெப்பம், நீரின்மை, நோய் முதலியவற்றால்) பசுமை இழக்கும்படியாகக் காய்ந்து சுருங்குதல்.

  ‘பூவும் பிஞ்சுமாக இருந்த கத்திரிச் செடி நீரின்றி வாடிக் கருகியது’
  ‘ஈரத் துணியில் மூடிவைத்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும்’
  ‘முதல் நாள் பறித்த பூ மறுநாள் வாடிவிடும்’
  ‘மழை இல்லாததால் பயிர்கள் வாடின’
  ‘தண்ணீர் விட ஆள் இல்லாமல் பூச்செடிகள் வாடிவிட்டன’

 • 2

  (முகம்) களையும் பொலிவும் இழத்தல்.

  ‘செய்தியைக் கேட்டதும் அவள் முகம் வாடியது’
  ‘அவன் முகம் வாடியிருந்ததைக்கொண்டு அலுவலகத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்தேன்’

 • 3

  (ஒருவர் பசி, நோய், தனிமை முதலியவற்றால்) வருந்துதல்; துன்பப்படுதல்.

  ‘குழந்தை பசியால் வாடுகிறது’
  ‘தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது?’
  ‘நண்பர்களைப் பிரிந்து தனிமையில் வாடினான்’
  ‘இளமையில் மிகவும் வறுமையில் வாடியவர்’
  ‘நன்றாகப் படித்திருந்தும் உரிய பயிற்சி இல்லாததால் வேலையின்றி வாடும் இளைஞர்கள்’

 • 4

  வட்டார வழக்கு (வீக்கம்) வடிதல்; குறைதல்.

  ‘இந்த மூலிகையை வைத்துக் கட்டினால் இரண்டு நாளில் கால் வீக்கம் வாடிவிடும்’