தமிழ் வார்த்தை யின் அர்த்தம்

வார்த்தை

பெயர்ச்சொல்

 • 1

  (பேச்சில் அல்லது எழுத்தில்) சொல்.

  ‘பத்து வார்த்தைகளில் எவ்வளவு அழகான கவிதை!’
  ‘அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை’
  ‘எனக்குத் தெலுங்கில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது’
  ‘பிரதமர் ஆங்கிலத்தில் பேசியதைப் பக்கத்தில் நின்றிருந்தவர் வார்த்தைக்கு வார்த்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டேபோனார்’
  ‘நம் எண்ணங்கள் முழுவதையும் வார்த்தைகளில் கொண்டுவர முடிவதில்லை’
  ‘இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் மந்திர வார்த்தைகள்’
  ‘ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் கிளம்பிவிட்டார்’
  ‘எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு ஒரு வார்த்தை திருப்பிச் சொல்லமாட்டான்’
  ‘இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சரியான இடைவெளி விட்டு எழுது’

 • 2

  திட்டு, விமர்சனம், பாராட்டு போன்றவை.

  ‘உன்னை ஒரு வார்த்தை சொல்வதற்கு உன் அண்ணனுக்கு உரிமை இல்லையா?’
  ‘இதுவரை எனது படைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் புகழ்ந்து சொன்னதில்லை’

 • 3

  அறிவுரை, கட்டளை, வேண்டுகோள், உறுதிமொழி, ஆறுதல் போன்றவை; பேச்சு.

  ‘என் வார்த்தையைக் கேட்டு நடந்தால்தான் நீ நல்ல நிலைக்கு வர முடியும்’
  ‘உன் தந்தையின் வார்த்தையை மீறி நீ நடக்கலாமா?’
  ‘நீங்கள் மட்டும் இதை நிரூபித்துவிட்டால் உங்கள் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறேன்’
  ‘தம்பி என் வார்த்தைகளை எப்போதுமே தட்ட மாட்டான்’
  ‘நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்கவில்லை என்றால் பிறகு என் வார்த்தைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?’
  ‘உன்னை நம்பி வாக்குக் கொடுத்துவிட்டேன். என் வார்த்தையைக் காப்பாற்றுவாய் அல்லவா?’
  ‘நான் துவண்டுபோய் இருந்த சமயத்தில் அவருடைய வார்த்தைகள்தான் எனக்கு இதமளித்தன’
  ‘பெரியவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் பிறகு முடிவு செய்யலாம்’