விதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விதி1விதி2

விதி1

வினைச்சொல்விதிக்க, விதித்து

 • 1

  வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்.

  ‘வரவுசெலவுத் திட்டத்தில் புதிய வரிகள் விதிக்கப்படலாம்’
  ‘விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக விதிக்கப்பட்டது’
  ‘உரிய காலத்தில் வட்டியைக் கட்டத் தவறினால் நிலுவைத் தொகைமீது அபராதம் விதிக்கப்படும்’
  ‘இன்று மாலைக்குள் பணத்தைக் கட்டத் தவறினால் அபராதம் விதித்துவிடுவார்’
  ‘அத்தியாவசிய மருந்துகளின் மீது புது வரிகள் விதிக்கப்படவில்லை’

 • 2

  (தண்டனை, தடை முதலியவற்றுக்கான உத்தரவை, ஆணையை) அதிகாரபூர்வமாகப் பிறப்பித்தல்.

  ‘கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது’
  ‘பாம்புத் தோலை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது’

 • 3

  (கட்டுப்பாடு) நிர்ணயித்தல்; (நிபந்தனை) முன்வைத்தல்.

  ‘சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் மனிதன் நடக்க வேண்டியிருக்கிறது’
  ‘தனிமனித சுதந்திரத்தின் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை அரசு விதிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்து’
  ‘நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் சரியாகச் செய்ய வேண்டும்’
  ‘அணுஆயுதச் சோதனை செய்யும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று பல நாடுகள் கருதுகின்றன’
  ‘நீங்கள் இவ்வளவு கடுமையாக நிபந்தனை விதித்தால் யார் வாடகைக்கு வருவார்கள்?’

 • 4

  (முற்பிறவியில் செய்த நன்மை, தீமை போன்ற காரணங்களால்) முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருத்தல்.

  ‘வறுமையில் உழல விதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை’
  ‘எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த வேலை எனக்குக் கிடைக்காததால், நமக்கு விதித்தது அவ்வளவுதான் என்று நான் இருந்துவிட்டேன்’

விதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விதி1விதி2

விதி2

பெயர்ச்சொல்

 • 1

  முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி; ஊழ்.

  ‘எல்லாம் விதிப்படி நடக்கும் என்று நம்பிச் சும்மா இருந்தால் முன்னேற முடியாது’
  ‘அவள் வாழ்க்கையில் விதி விளையாவிட்டது’

 • 2

  ஒன்றைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஒழுங்கு முறை.

  ‘உங்கள் நலனுக்காகச் சாலை விதிகளைக் கடைப்பிடியுங்கள்’
  ‘அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிகளுள் ஒன்று’

 • 3

  இயற்கையின் நிகழ்வில் உள்ள ஒழுங்கு.

  ‘பிறந்தவன் என்றாவது ஒரு நாள் இறந்துதான் போவான் என்ற இயற்கையின் விதியை யாரால் மீற முடியும்?’
  ‘எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்ச் செயல் உண்டு என்ற இயற்பியல் விதியின் அடிப்படையில்தான் ஏவுகணை செலுத்தப்படுகிறது’