விரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விரி1விரி2

விரி1

வினைச்சொல்விரிய, விரிந்து, விரிக்க, விரித்து

 • 1

  ஒன்று மடங்கிய, சுருங்கிய நிலையிலிருந்து அல்லது இருக்கும் நிலையிலிருந்து பெரிதான அல்லது முழு அளவிலான நிலைக்கு வருதல்.

  ‘இதயம் சுருங்கி விரிவதால்தான் இரத்த ஓட்டம் ஏற்படுகிறது’
  ‘மொட்டு விரிந்ததும் பார்க்க அழகாக இருக்கும்’
  ‘உடற்பயிற்சி செய்வதன்மூலம் தசைகள் சுருங்கி விரிந்து வலிமை பெறுகின்றன’
  ‘இந்த மருந்து இரத்தக் குழாய்களை விரியச் செய்கிறது’
  ‘கண்கள் விரிய நான் சொன்ன கதையைக் குழந்தை கேட்டுக்கொண்டிருந்தது’
  ‘அவன் விரல்கள் விரியக் கையை நீட்டினான்’
  ‘உள்மூச்சு வாங்கும்போது நமது மார்பு விரிகிறது’
  ‘வாழைக்கன்றின் விரியாத இளங்குருத்து மிருதுவாக இருந்தது’
  ‘அவள் இதழ்களில் சிரிப்பு விரிந்தது’

 • 2

  (தன்மையில், அளவில்) அதிகமானதாக ஆதல்.

  ‘நூறு பக்கமாக இருந்த நாவல் இருநூறு பக்கமாக விரிந்தது’
  ‘விண்வெளியைப் பற்றிய தகவல்களைப் பூமிக்கு அனுப்புதல், பூமியிலிருந்து வரும் தகவல்களைப் பெற்று உலகம் முழுவதும் அனுப்புதல் என்று செயற்கைக்கோள்களின் பணிகள் விரிகின்றன’

 • 3

  சிந்தனை, பார்வை போன்றவற்றைக் குறித்து வரும்போது பரந்ததாக இருத்தல்.

  ‘பரந்த மனப்பான்மையும் விரிந்த நோக்கும் கொண்ட அரசியல் தலைவர்’
  ‘வரலாற்றைக் குறித்து விரிந்த பார்வை நமக்கு வேண்டும்’
  ‘நிறைய தத்துவ நூல்கள் படிக்கப்படிக்க எனது அறிவு விரிந்தது’
  ‘திருக்குறளில் வரும் ஒவ்வொரு சொல்லும் மிகுந்த ஆழமும் விரிந்த பொருளும் கொண்டது’
  ‘இன்றைய எழுத்தாளர்களுக்கான களங்கள் விரிந்திருக்கின்றன’

 • 4

  அதிகப் பரப்புடையதாக இருத்தல்; பரந்து இருத்தல்.

  ‘கடலும் மணல் வெளியும் விரிந்துகிடந்தன’
  ‘விரிந்த வான்பரப்பு’
  ‘அனைத்து முகலாய அரசர்களையும் விட ஔரங்கசீப்பின் பேரரசு பரந்து விரிந்திருந்தது’
  உரு வழக்கு ‘அவள் கண்களில் கனவு விரிந்தது’

 • 5

  ஒரு காட்சி, நினைவு போன்றவை மனத்தில் அல்லது கற்பனையில் தோன்றுதல்.

  ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழ தேசம் என் கண்முன் விரிந்தது’
  ‘கடந்தகாலம் என் கண்முன் விரிகிறது’
  ‘அவளை முதன்முதலில் சந்தித்த தருணம் அவனுடைய மனத்தில் விரிந்தது’

 • 6

  (பார்வை ஒன்றின் மேல்) முழுமையான அளவில்படுதல்.

  ‘அவனுடைய பார்வை எதிரே இருந்த கடல்மீது விரிந்தது’

 • 7

  இலக்கணம்
  (தொகைச்சொல் முதலியவை) முழுநிலையில் காட்டப்படுதல்.

  ‘‘ஊறுகாய்’ என்னும் வினைத்தொகை விரியும்போது அது மூன்று காலத்திற்கும் பொருந்தியிருப்பது தெரியவரும்’

விரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விரி1விரி2

விரி2

வினைச்சொல்விரிய, விரிந்து, விரிக்க, விரித்து

 • 1

  ஒன்றை மடங்கிய, சுருங்கிய நிலையிலிருந்து அல்லது இருக்கும் நிலையிலிருந்து பெரிதான அல்லது முழு அளவிலான நிலைக்கு வரச்செய்தல்.

  ‘மயில் மேகத்தைக் கண்டால் தோகையை விரித்து ஆடும்’
  ‘குடையை விரி’
  ‘தலை முடியை விரித்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்’
  ‘கால்களை விரித்தபடி படுத்துக்கிடந்தான்’
  ‘கையை விரித்துக் காட்டு. எனக்குக் கைரேகை பார்க்கத் தெரியும்’

 • 2

  (பாய், கம்பளி, இலை முதலியவற்றை முழுதும் ஒரு பரப்பில்) படியும்படி போடுதல்.

  ‘பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்’
  ‘விருந்தினர்கள் உட்கார ஜமுக்காளம் விரித்தான்’
  ‘இலையை விரித்துத் தண்ணீர் தெளித்தான்’
  ‘வேடன் ஏரிக்கரையில் வலையை விரித்துவைத்தான்’
  ‘துண்டைக் கீழே விரித்து அதில் நெல்லைக் கொட்டினான்’

 • 3

  (மரம் போன்றவை நிழலை) பரப்பியிருத்தல்.

  ‘அந்தப் பூங்காவில் மரங்கள் விரித்திருந்த நிழலின் அடியில் காதலர்கள் அமர்ந்திருந்தனர்’

 • 4

  விளக்கி அல்லது விவரித்துச் சொல்லுதல்.

  ‘முதல் அத்தியாயத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டவற்றைப் பிற அத்தியாயங்களில் விரித்துக் கூறியுள்ளார்’
  ‘தொல்காப்பியத்தின் சிறப்புகளை விரித்துக் கூறுவதற்கு நேரம் போதாது என்பதால் எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்’

 • 5

  இலக்கணம்
  (தொகைச்சொல் முதலியவற்றை) முழுநிலையில் காட்டுதல்.

  ‘‘சாரைப்பாம்பு’ என்பதை ‘சாரையாகிய பாம்பு’ என்று விரிப்பது வழக்கம்’