தமிழ் வில் யின் அர்த்தம்

வில்

வினைச்சொல்விற்க, விற்று

 • 1

  குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தல் அல்லது குறித்த மதிப்பில் ஒன்று கொடுக்கப்படுதல்.

  ‘கிராமத்தில் இருந்த வீட்டை விற்றுவிட்டார்’
  ‘நிலத்தை விற்றுதான் அப்பா என்னைப் படிக்கவைத்தார்’
  ‘ஒரு கிலோ அரிசி என்ன விலை விற்கிறது தெரியுமா?’
  ‘இந்தப் படத்தின் உரிமையைப் பல கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்’
  ‘என்னிடம் இருந்த நூறு பங்குகளையும் நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்’

தமிழ் வில் யின் அர்த்தம்

வில்

பெயர்ச்சொல்

 • 1

  (குச்சியின் அல்லது தடித்த உலோகக் கம்பியின்) இரு முனைகளையும் வளைத்துக் கயிறு, மெல்லிய கம்பி, நரம்பு போன்றவற்றால் கட்டி அம்பு எய்வதற்குப் பயன்படுத்தும் சாதனம்.

  ‘இன்றும் மலையில் வாழும் பழங்குடியினர் வில்லைப் பயன்படுத்துகின்றனர்’

 • 2

  (வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சியில்) மேற்குறிப்பிட்டது போன்ற அமைப்பு உடைய, கிடைமட்டமாக வைத்துக் கோலால் தட்டி ஒலி எழுப்பும் ஒரு வகை வாத்தியம்.

 • 3

  (சில வகை இசைக் கருவிகளின்) கம்பிகளின் மேல் வைத்து இழுப்பதால் ஒலி எழுப்பும், இழைகளால் கட்டப்பட்ட கோல்.

  ‘இந்த இசைக் கலைஞர் வயலின் வாசிக்கும்போது வில்லைக் கையாளும் விதமே நேர்த்தியாக இருக்கும்’

 • 4

  விசைக்கு உள்ளானால் விரிந்தோ சுருங்கியோ பழைய நிலைக்கு வந்துவிடக்கூடிய தன்மை கொண்ட உலோகச் சுருள் அல்லது பட்டைகள்.

  ‘வில் வைத்த வண்டி’

 • 5

  கணிதம்
  வட்டத்தின் பகுதியாக அமையும் வளைந்த கோடு.