வினைச்சொல்
- 1
(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை) விலகச் செய்தல்; ஒதுக்குதல்.
‘திரை விலக்கப்பட்டதும் நாடகம் தொடங்கியது’‘அரங்கத்தின் திரையை விலக்கிக் கூட்டத்தைப் பார்த்தான்’‘முகத்திரையை விலக்குமாறு விமான நிலையக் காவலர்கள் கூறினர்’‘தாழ்ப்பாள் விலக்கப்பட்டதும் கதவு திறந்தது’‘கூட்டத்தை விலக்கிக்கொண்டு அந்த இளைஞன் வேகமாக ஓடினான்’‘தன் தோளின் மேல் வைத்திருந்த அவன் கைகளை விலக்கினாள்’ - 2
(சண்டையிடுபவர்களை) தடுத்து நிறுத்துதல் அல்லது பிரித்தல்.
‘நான் அவர்களை விலக்கிவிடாமல் இருந்திருந்தால் அங்கு ஒரு கொலையே நடந்திருக்கும்’ - 3
(பொறுப்பு, தொடர்பு முதலியவற்றிலிருந்து) நீக்குதல்; அமலில் இருப்பதை நீக்குதல்.
‘அலுவலகப் பணத்தைக் கையாடிவிட்டதாகக் குற்றம்கூறி அவரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டனர்’‘கலவரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு மாலையில் இரண்டு மணி நேரத்திற்கு விலக்கிக்கொள்ளப்படும்’ - 4
(படை, காவல் முதலியவற்றை) வாபஸ் பெறுதல்.
‘சமாதானம் ஏற்பட்ட பிறகு படைகள் விலக்கிக்கொள்ளப்படும்’ - 5
(வேண்டாதது, தேவையில்லாதது அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியது என்று கருதுவதை) ஒதுக்குதல்.
‘கவிதையில் பொருளற்ற சொற்களை விலக்க வேண்டும்’‘குழந்தைகள் தீய பழக்கங்களை விலக்கி நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்’‘தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை விலக்கிப் புதிய பாதையில் நம்பிக்கையுடன் இளைஞர்கள் செல்ல வேண்டும்’‘வயிற்றில் புண் உள்ளவர்கள் காரமான உணவு வகைகளை விலக்க வேண்டும்’‘பத்தியம் இருக்கும்போது உணவில் உப்பு, புளி ஆகியவற்றை விலக்க வேண்டும்’
பெயர்ச்சொல்
- 1
(குறிப்பிட்ட விதி, சட்டம் முதலியவற்றிற்கு) உட்படாமல் இருக்கத் தரும் அனுமதி; விதி தளர்த்தப்படுதல்.
‘விவசாயிகளுக்கு மின்சாரக் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’‘குழந்தைகளுக்கான திரைப்படத்திற்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கோரினர்’‘ரம்ஜான் நோன்பிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள் முதலியோருக்கு இஸ்லாம் விலக்கு அளித்துள்ளது’