தமிழ் விலகு யின் அர்த்தம்

விலகு

வினைச்சொல்விலக, விலகி

 • 1

  (குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) நீங்கி அல்லது தள்ளிச் செல்லுதல்; அகலுதல்.

  ‘பேருந்து மிக அருகில் வந்ததும் அவசரமாக விலகினான்’
  ‘சூரியனை மறைத்திருந்த மேகம் விலகியது’
  ‘நுணுக்கமாகச் சிலம்பம் பயின்றிருந்தால் மட்டுமே சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தாக்குதலைச் சமாளித்து விலக முடியும்’
  ‘பூக்களின் மேலிருந்து அவள் கண்கள் விலகவில்லை’
  ‘போலீசார் வந்ததும் கூட்டம் விலகி வழிவிட்டது’
  ‘நீர், கண்ணாடி போன்ற ஊடகங்களின் வழியே ஒளி செல்லும்போது தன் பாதையிலிருந்து சற்று விலகிச் செல்கிறது’
  உரு வழக்கு ‘எந்தச் சூழலிலும் நேர்மையின் பாதையிலிருந்து விலகக் கூடாது என்று உறுதி பூண்டார்’

 • 2

  எலும்பு பிசகுதல்; நழுவுதல்.

  ‘கீழே விழுந்ததில் கைமூட்டு விலகிவிட்டது’

 • 3

  குறிப்பிடப்படும் இடத்திலிருந்து தள்ளி அமைதல்.

  ‘ஊரைவிட்டு விலகியிருக்கும் புறவழிச் சாலையில் அந்த விபத்து நடந்தது’
  ‘இந்தத் தீவு இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் விலகி அமைந்துள்ளது’
  ‘நகரத்தை விட்டு வெகு தூரம் விலகித் தொழிற்சாலை அமைந்திருந்தது’

 • 4

  (தொடர்பு, உறவு, பொறுப்பு முதலியவற்றிலிருந்து) நீங்குதல்.

  ‘இடைத்தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்’
  ‘பொருளாதாரக் கூட்டமைப்பிலிருந்து எந்த நாடும் விலக விரும்பவில்லை’
  ‘போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக வேட்பாளர் அறிவித்தார்’
  ‘புதிய வேலையில் ஆறு மாதத்துக்குக்கூட அவரால் தாக்குப்பிடிக்க முடியாததால் பணியிலிருந்து விலக நேரிட்டது’
  ‘அவர் ஆசிரியர் பணியை விட்டு விலகி ஒரு வருடம் ஆகிறது’
  ‘உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்’

 • 5

  (கவலை, வருத்தம் முதலியவை) மறைதல்.

  ‘தக்க சமயத்தில் நண்பர்கள் உதவியதால் எனது துன்பம் விலகியது’

 • 6

  தனிமைப்படுத்திக்கொள்ளுதல்; ஒதுங்குதல்.

  ‘நீ விலகிவிலகிப் போவதால்தான் உனக்கு நண்பர்களே இல்லை’
  ‘படித்தவர்கள் அரசியலிலிருந்து விலகி இருக்கக் கூடாது’