தமிழ் விழு யின் அர்த்தம்

விழு

வினைச்சொல்விழ, விழுந்து

 • 1

  (ஒரு பரப்பில் படுதல் அல்லது ஒன்றிலிருந்து விடுபடுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒன்று) மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று (ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில்) படுதல்

   ‘வாளி கிணற்றில் விழுந்துவிட்டது’
   ‘ஒரே நேரத்தில் மூன்று காய்கள் குழிக்குள் விழுந்தன’
   ‘பாசி வழுக்கியதால் தவறிக் குளத்தில் விழுந்துவிட்டான்’
   ‘கண்ணில் தூசி விழுந்து விட்டது’
   ‘வானத்திலிருந்து எண்ணற்ற எரிகற்கள் பூமியை நோக்கி விழுகின்றன’
   ‘காற்றில் அவனுடைய தலைமுடி கலைந்து நெற்றியில் வந்து விழுந்தது’
   ‘மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களைச் சிறுவர்கள் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள்’
   ‘திடீரென்று தூறல் விழத்தொடங்கியது’
   ‘நாடகம் முடிந்ததும் அரங்கில் திரை விழுந்தது’
   ‘குழந்தைக்குப் பால் பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன’

  2. 1.2 (வெடிகுண்டு ஒரு இடத்தின் மேல்) வீசப்படுதல்

   ‘குண்டுகள் விழுந்த சில நிமிடங்களுக்குள் அந்த நகரமே பற்றி எரிந்தது’

  3. 1.3 (அடி, உதை, குத்து போன்றவை ஒருவருக்கு) கிடைத்தல்

   ‘அவன் தலையில் வெட்டு விழுந்தது’
   ‘கன்னத்தில் விழுந்த அறையைத் தாங்க முடியாமல் அவன் சுருண்டு விழுந்தான்’
   ‘‘என்ன வீட்டில் நேற்று உனக்கு உதை விழுந்ததா?’ என்று நண்பன் என்னிடம் நக்கலாகக் கேட்டான்’
   ‘நேற்று வீட்டுக்குத் தாமதமாகப் போனதால் எனக்குத் திட்டு விழுந்தது’

  4. 1.4 (கால்பந்து போன்ற விளையாட்டுகளில் கோல்) அடிக்கப்படுதல்

   ‘பிரேசில் அணிக்கு அடுத்தடுத்து கோல்கள் விழுந்ததால் எதிர் அணியினர் நிலைகுலைந்துபோனார்கள்’

 • 2

  (ஒரு பரப்பில் படுவது போல் கூறும் வழக்கு)

  1. 2.1 (சூரியன்) மறைதல்

   ‘மாலையில் சூரியன் மலையில் விழவும் இருள் பரவத் தொடங்கியது’
   ‘பொழுது விழுந்தது’

  2. 2.2 (புகைப்படத்தில் உருவம்) பதிவாதல்/(திரையில், கண்ணாடியில் உருவம்) தெரிதல்

   ‘திருமண வீட்டில் எடுத்த புகைப்படத்தில் நீ நன்றாக விழுந்திருக்கிறாய்’
   ‘கண்ணாடியில் விழும் பிம்பம் இடவல மாற்றத்துடன் தோன்றுகிறது’

  3. 2.3 (ஒன்றில் கீறல், குழி முதலியவை) ஏற்படுதல்; (நரை, வழுக்கை, சுருக்கம் முதலியவை) தோன்றுதல்

   ‘விரிசல் விழுந்த கண்ணாடி’
   ‘சிரித்தால் குழந்தையின் கன்னத்தில் குழி விழுகிறது’
   ‘குடத்தில் ஓட்டை விழுந்துவிட்டது’
   ‘கூனல் விழுந்த முதுகு’
   ‘நீர் இல்லாமல் வயலில் வெடிப்பு விழுந்துவிட்டது’
   ‘ஐம்பது வயதாகியும் அவருக்கு நரை விழவில்லை’
   ‘கதிர் தோன்றும் பருவத்தில் மழை பெய்தால் கருக்காய் அதிகம் விழுவது உண்டு’
   உரு வழக்கு ‘கதையில் அருமையாக ஒரு முடிச்சு விழுகிறது’

  4. 2.4 (ஒரு பரப்பின் மீது சூரிய ஒளி, நிழல் போன்றவை) படுதல்

   ‘சூரிய ஒளி கிணற்று நீரில் விழுந்தது’
   ‘ஜன்னல் வழியே நிலவின் ஒளி அறைக்குள் விழுந்தது’
   ‘பொம்மையின் நிழல் சுவரின் மீது பூதாகரமாக விழுந்தது’

  5. 2.5 (ஒலியைக் காதால்) கேட்டல்

   ‘அவன் சொன்னது என் காதில் சரியாக விழவில்லை’
   ‘கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் எதிரி நாட்டுப் படைகளின் பேரிரைச்சல் மன்னரின் செவிகளில் விழுந்தது’

  6. 2.6 (வலையில் மீன் போன்றவை) அகப்படுதல்; சிக்குதல்

   ‘வலையில் நிறைய மீன்கள் விழுந்திருந்தன’

  7. 2.7 (பணம்) வசூலாதல்/(பரிசுச் சீட்டு, குலுக்கல் போன்றவற்றின் மூலம் பரிசு) கிடைத்தல்

   ‘எனக்கு விழுந்த மொய்ப் பணத்தை வைத்துக் கடனில் ஒரு பகுதியை அடைத்துவிட்டேன்’
   ‘கோயிலில் எப்போதுமே கூட்டம் அதிகம் என்பதால் தீபாராதனைத் தட்டில் நிறைய சில்லறை விழும்’
   ‘போன மாதக் குலுக்கலில் யாருக்கு முதல் பரிசு விழுந்தது?’

  8. 2.8 (பயன்படுத்தப்பட்ட துணி, பாத்திரம் போன்றவை சுத்தம் செய்வதற்காக) சேர்தல்

   ‘தேய்க்க நிறைய பாத்திரம் விழுந்திருந்தன’
   ‘விதைப்புக் காலமாக இருந்ததால் சலவைக்கு அதிகத் துணி விழவில்லை’

 • 3

  (ஒரு விளைவு ஏற்படுதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (நோயினால்) பாதிக்கப்படுதல்

   ‘அவர் இதுவரை எந்த நோயிலும் விழுந்ததில்லை’
   ‘பூச்சி விழுந்து பயிர்கள் நாசமாகிவிட்டன’

  2. 3.2 (கிரிக்கெட்டில்) விக்கெட் இழப்பு ஏற்படுதல்/(தாயம் போன்ற விளையாட்டுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை) கிடைத்தல்

   ‘முரளிதரன் பந்து வீச்சில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன’
   ‘ஒரு தாயமும் இரண்டும் விழுந்தால் போதும்; ஆட்டத்தை நான் முடித்துவிடுவேன்’

  3. 3.3 (ஒருவரின் கவனம், பார்வை போன்றவை ஒன்றின் அல்லது ஒருவரின் மேல்) குவிதல்

   ‘ஆங்கிலேய அரசின் கவனம் பாண்டிச்சேரியின் மேல் விழுந்தது’
   ‘நான் பயந்தது போலவே அவனுடைய பார்வை என்மீது விழ ஆரம்பித்திருக்கிறது’
   ‘அந்த ரவுடிக் கும்பலின் மீது காவல் துறையினரின் பார்வை சற்று ஆழமாக விழுந்தது’

  4. 3.4 (ஒருவர் மீது பொறுப்பு, பழி போன்றவை) சுமத்தப்படுதல்

   ‘தொழிற்சாலையின் நிதி விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என் மேல் விழுந்தது’
   ‘பதினெட்டு வயதிலேயே குடும்பப் பொறுப்பு என் மீது விழுந்ததால் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது’
   ‘அவன் தற்கொலை செய்துகொண்டதற்கு நான்தான் காரணம் என்ற பழி என்மீது விழுந்தது’

  5. 3.5 (நாணயம் சுண்டப்படும்போது தலை அல்லது பூ) வருதல்

   ‘தலை விழுந்தால் தமிழ்ப் படத்துக்குப் போகலாம். பூ விழுந்தால் இந்திப் படத்துக்குப் போகலாம்’

  6. 3.6 (ஒருவர் மீது கோபத்தை அதிகமாக) வெளிப்படுத்துதல்

   ‘அண்ணன் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று விழுகிறான்’

  7. 3.7 (வாக்கு, ஆதரவு போன்றவை) பதிவாதல்; கிடைத்தல்

   ‘சுயேச்சையாக நின்ற ஒருவருக்குப் பத்து வாக்குகள்தான் விழுந்திருந்தன’
   ‘மொத்தம் பதிவான 498 வாக்கு களில் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக 312 வாக்குகளும் ஆதரவாக 186 வாக்குகளும் விழுந்தன’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (எதிர்பார்த்ததை விட அல்லது இயல்பானதை விட) குறைதல்

   ‘ஒரே வாரத்தில் இந்தப் படத்தின் வசூல் விழுந்துவிட்டது’
   ‘வைத்தியர் வந்து பார்த்துவிட்டு ‘நாடி விழுந்துவிட்டது’ என்று சொன்னார்’

  2. 4.2 (போரில்) வீழ்ச்சி அடைதல்

   ‘தொடர்ந்து பல நாட்களாக நடந்த போருக்குப் பின் சித்தூரும் அதன் கோட்டையும் விழுந்தன’
   ‘இவ்வளவு விரைவில் பாக்தாத் விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’