தமிழ் வெட்டு யின் அர்த்தம்

வெட்டு

வினைச்சொல்வெட்ட, வெட்டி

 • 1

  (கருவியைப் பயன்படுத்தித் துண்டாக்குதல், பிரித்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கத்தி, அரிவாள் போன்றவற்றால்) துண்டித்தல்; (கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றால்) நறுக்குதல்; துண்டாக்குதல்

   ‘தந்திக் கம்பியைத் தொட்டுக்கொண்டிருந்த கிளைகளை வெட்டினார்கள்’
   ‘இந்த முனை மழுங்கிய கத்தியால் வெண்ணெயைக்கூட வெட்ட முடியாது’
   ‘குளித்துவிட்டு வந்தவுடன் நகத்தை வெட்டு’
   ‘பத்திரிகையில் வரும் அழகான படங்களையெல்லாம் என் தங்கை வெட்டி எடுத்துத் தனியே வைத்துக்கொள்வாள்’
   ‘காய்கறிகளைப் பொடியாக வெட்டி வைக்கவும்’
   ‘ரொட்டியை வெட்டிக் கொடுங்கள்’

  2. 1.2 செதுக்குதல் போன்ற செயல்களின் மூலம் ஒரு பரப்பின் ஒரு பகுதியை நீக்குதல்

   ‘மண்வெட்டியால் வரப்பை வெட்டி ஒழுங்குபடுத்தினான்’
   ‘பாறையை வெட்டிச் செய்த படிகள்’

  3. 1.3 (மண்வெட்டி போன்றவற்றைக் கொண்டு ஒரு இடத்தை) தோண்டுதல்

   ‘நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரம்’
   ‘கிணறு வெட்ட ஆட்கள் வருகிறார்கள்’
   ‘செத்துக் கிடந்த நாயைச் சாலையோரத்தில் குழி வெட்டிப் புதைத்தோம்’
   ‘இது தென்னங்கன்று வைப்பதற்காக வெட்டிய குழி’
   ‘இந்தத் தாது மலைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது’

  4. 1.4 (கல், உலோகம் போன்றவற்றில் எழுத்து, குறியீடு போன்றவற்றை) பொறித்தல் அல்லது பதித்தல்

   ‘அரசர்கள் தாங்கள் பெற்ற வெற்றிகளைக் கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள்’
   ‘எவர்சில்வர் குடத்தில் யார் பெயர் வெட்ட வேண்டும்?’

 • 2

  (நீக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (திரைப்படம், ஒரு படைப்பு போன்றவற்றில் ஆட்சேபமான அல்லது தேவையில்லாத பகுதியை) நீக்குதல்

   ‘வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருந்த காட்சிகளைத் தணிக்கைக் குழு வெட்டிவிட்டது’

  2. 2.2 (சில விளையாட்டுகளில் எதிராளியின் காயை) ஆட்டத்திலிருந்து நீக்குதல்

   ‘நீ உன் குதிரையை எந்தக் கட்டத்தில் நகர்த்தினாலும் நான் வெட்டுவேன் என்றான்’

 • 3

  (பிற வழக்கு)

  1. 3.1 (பேச்சை) மறுத்தல்; தடுத்தல்

   ‘அவர் தெரிவித்த கருத்தை ஒட்டியும் வெட்டியும் பேசினார்கள்’
   ‘அப்பாவின் பேச்சை வெட்டுகிற மாதிரி மாமா பதில் சொன்னார்’

  2. 3.2 (கை, கால் முதலிய உறுப்புகள் நோயால்) ஒரு பக்கமாகச் சுண்டப்படுதல்

   ‘வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தவரின் கைகால்கள் வெட்டி இழுத்தன’

  3. 3.3 (மின்னல்) மின்னுதல்

   ‘மின்னல் வெட்டும் நேரம்கூட இருக்காது. அதற்குள் இது நடந்துவிட்டது’

  4. 3.4பேச்சு வழக்கு (சாப்பாட்டை) வயிறு நிரம்ப உண்ணுதல்

   ‘கோழிக் குழம்பு என்றால் நன்றாக வெட்டுவான்’

  5. 3.5 ஆடு, கோழி முதலியவற்றை உணவுக்காகக் கொல்லுதல்

   ‘கிடா வெட்டி விருந்து வைத்தார்’

  6. 3.6 அரிவாளால் தாக்குவதன் மூலம் ஒருவரைக் கொலைசெய்தல்

   ‘கோபத்தில் சொந்த மாமனையே வெட்டிவிட்டுச் சிறைக்குச் சென்றவன் அவன்’

  7. 3.7 (கோடுகள், சாலைகள் போன்றவை ஒன்றுக்கொன்று) குறுக்கிடுதல்

   ‘இரு கோடுகளும் ஒன்றையொன்று வெட்டாமல் நேராகச் செல்ல வேண்டும்’

தமிழ் வெட்டு யின் அர்த்தம்

வெட்டு

பெயர்ச்சொல்

 • 1

  வெட்டும் செயல்.

  ‘ஒரே வெட்டில் கட்டை இரண்டு துண்டாக விழுந்தது’

 • 2

  (திரைப்படத்தில் காட்சி) நீக்கம்.

  ‘இந்தப் படம் பல இடங்களில் வெட்டுக்கு உள்ளாகியிருக்கிறது’