வெடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெடி1வெடி2

வெடி1

வினைச்சொல்வெடிக்க, வெடித்து

 • 1

  (ஒலியுடன் பிளத்தல் அல்லது வெளிப்படுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று) ஓசையோடு பிளத்தல்

   ‘எரிமலை வெடித்துத் தீக் குழம்பைக் கக்கியது’
   ‘குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போனால் கொதிகலன் வெடித்துவிடும் ஆபத்து உண்டு’
   ‘ஊசியால் குத்தியதும் பலூன் படாரென்று வெடித்தது’
   ‘கடுகு வெடித்ததும் வெங்காயத்தை வாணலியில் போடவும்’
   ‘தலைவலியால் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது’
   ‘அந்தச் செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சம் வெடித்துவிடும்போல் இருந்தது’
   உரு வழக்கு ‘தோல்வியினால் இதயம் வெடிக்க அழுது புலம்பினான்’

  2. 1.2 (கோபம், அழுகை, விம்மல்) வேகத்துடன் வெளிப்படுதல்

   ‘தலைகுனிந்து உட்கார்ந்திருந்தவளிடமிருந்து விம்மல்கள் வெடித்தன’
   ‘அவளது கோபம் அழுகையாக வெடித்தது’
   ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவருக்குக் கோபம் வெடித்தது’

  3. 1.3 (வெடிகுண்டு, பட்டாசு ஆகியவை) விசையுடன் சிதறுதல்/(வெடிகுண்டு, பட்டாசு ஆகியவற்றை) விசையுடன் சிதறச் செய்தல்

   ‘ஒரே நேரத்தில் மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன’
   ‘இந்தியா நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்துச் சோதனை நடத்தியது’

  4. 1.4 (கோபம், எரிச்சல் முதலியவற்றால்) சீறுதல்

   ‘‘கொஞ்சமாவது அக்கறை இருந்தால் இப்படிச் செய்வீர்களா?’ என்று அப்பா வெடித்தார்’

 • 2

  (பிளத்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 விசையுடன் துண்டுபடுதல்

   ‘மூச்சுத்திணறி ரத்த நாளங்கள் வெடித்து அவர் இறந்தார்’

  2. 2.2 (ஒரு பொருள் அல்லது பரப்பு) தெறித்தல் அல்லது பிளத்தல்

   ‘மழையே இல்லாததால் நிலம் பாளம்பாளமாக வெடித்துக்கிடந்தது’
   ‘பனியில் உதடுகள் வெடித்துவிட்டன’
   ‘ஆவியில் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு வெடித்துப் பிளந்திருந்தது’
   ‘இலவம்பஞ்சு முதிர்ந்ததும் வெடித்துவிடுகிறது’
   ‘அக்காவுக்குக் குதிகால் வெடித்திருந்தது’
   ‘வெள்ளரிப் பழம் வெடித்துவிடும் பக்குவத்தில் உள்ளது’
   ‘பாளை வெடித்துத் தென்னம் பூக்கள் மணிமணியாகத் தெரிந்தன’

 • 3

  (பிற வழக்கு)

  1. 3.1 (போர், புரட்சி முதலியவை) தீவிரத் தன்மையுடன் ஏற்படுதல்

   ‘எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் உள்ளது’
   ‘சம்பள உயர்வு கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கலாம்’
   ‘கியூபாவில் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது’

வெடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெடி1வெடி2

வெடி2

பெயர்ச்சொல்

 • 1

  வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.

  ‘வெடி வைத்துப் பாறைகளைத் தகர்த்தார்கள்’

 • 2

  வெடித்துச் சத்தம் எழுப்பும் பட்டாசு.

  ‘தீபாவளிக்கு வெடி வாங்கிவிட்டாயா?’