தமிழ் வெளியிடு யின் அர்த்தம்

வெளியிடு

வினைச்சொல்வெளியிட, வெளியிட்டு

 • 1

  (அஞ்சல் தலை, திரைப்படம் முதலியவற்றை) பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்.

  ‘சுதந்திர தினத்தின் ஐம்பது ஆண்டு நிறைவு நினைவாக அரசு புதிய அஞ்சல் தலையை வெளியிட்டது’
  ‘நான் நடித்திருக்கும் புதிய படம் அடுத்த மாதம் வெளியிடப்படும்’

 • 2

  (உணர்ச்சி, கருத்து முதலியவற்றைப் பலரும் அறியும் வகையில்) வெளிப்படுத்துதல்.

  ‘தயங்கித்தயங்கி விஷயத்தை வெளியிட்டான்’
  ‘தன்னுடைய வியப்பை வெளியிடாமல் அவளால் இருக்க முடியவில்லை’
  ‘எப்போதுமே என் கருத்துகளைத் துல்லியமாக வெளியிட முயற்சிக்கிறேன்’
  ‘இந்த ரகசியத்தை வெளியிடக் கூடாது என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்’

 • 3

  (நூல், நாணயம் முதலியவற்றை) அச்சிட்டு வெளிக்கொண்டு வருதல்; (செய்தி, கட்டுரை போன்றவற்றை ஒரு பத்திரிகையில்) இடம்பெறச் செய்தல்; பிரசுரித்தல்.

  ‘வெளியிட்ட ஆயிரம் பிரதிகளும் விற்பனையாகிவிட்டன’
  ‘இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது’
  ‘பல அருமையான புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகம் இது’
  ‘சிறந்த படைப்புகளை வெளியிடுவதே எங்களுடைய நோக்கம்’
  ‘மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை இலவசமாக வெளியிடப் பத்திரிகைகள் முன்வர வேண்டும்’
  ‘மேற் கூறிய தகவல்களை அந்தப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது’
  ‘நதிகள் இணைப்பு குறித்த எனது கட்டுரையை வெளியிட எல்லாப் பத்திரிகைகளும் மறுத்துவிட்டன’
  ‘புதிய இரண்டு ரூபாய் நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது’

 • 4

  (பத்திரம், பங்கு போன்றவற்றைப் பொதுமக்கள் வாங்கும் முறையில்) அதிகாரபூர்வமாகக் கிடைக்கச்செய்தல்.

  ‘தேசியமயமாக்கப்பட்ட இந்த வங்கி பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது’
  ‘பல நிறுவனங்கள் கடன் பத்திரத்தை வெளியிடத் தொடங்கியுள்ளன’
  ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் ஆண்டறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெளியிடுகின்றன’

 • 5

  அறிவித்தல்.

  ‘தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படிதான் தேர்தல் தேதி வெளியிடப்படும்’

 • 6

  வெளிவரச் செய்தல்.

  ‘தாவரங்கள் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்- டை-ஆக்சைடை வெளியிடுகின்றன’
  ‘சூரியன் கடும் வெப்பத்தை வெளியிடுகிறது’