தமிழ் வேலை யின் அர்த்தம்

வேலை

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) நிறைவேற்ற, மேற்கொள்ள, செய்ய வேண்டியிருக்கும் செயல்.

  ‘வீட்டில் நிறைய வேலை இருக்கிறது’
  ‘குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவது ஒரு பெரிய வேலையா?’
  ‘சமையல் வேலை முடிந்ததும் வெளியே புறப்படலாம்’
  ‘என்ன வேலையாக இங்கு வந்திருக்கிறாய்?’
  ‘எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது’
  ‘தூங்குவதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன’
  ‘நீ சொல்வதெல்லாம் நடக்கக்கூடிய வேலையாக இல்லை’

 • 2

  இயக்கம்.

  ‘உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நரம்பு மண்டலத்துக்குத்தான் வேலை அதிகம்’

 • 3

  செயல்.

  ‘பழங்காலத்தில் யானைகள் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன’

 • 4

  (குறிப்பிடப்படும் செயலோடு தொடர்புடைய) பணி.

  ‘கோயில் கட்டும் வேலை நடந்து வருகிறது’
  ‘இதே வேலை ரொம்ப நாளாக நடந்துவருவதாகக் கேள்விப்பட்டேன்’
  ‘கல்யாண வேலைகளை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தார்’

 • 5

  அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு; பணி.

  ‘தனியார் நிறுவனத்தில் வேலை’
  ‘கணிப்பொறியில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்’
  ‘உடல் நிலை சரியில்லாததால் அவர் வேலைக்குச் செல்லவில்லை’

 • 6

  (நிறுவனம், அலுவலகம் முதலியவற்றில் உள்ள) குறிப்பிட்ட பணிக்கான இடம்.

  ‘எங்கள் தொழிற்சாலையில் வேலை காலி இல்லை’
  ‘வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்’
  ‘ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்’

 • 7

  குறிப்பிடப்படும் தொழில்.

  ‘ஆணி இல்லாமல் தச்சு வேலை எப்படி நடக்கும்?’
  ‘இவை பூச்சு வேலைக்கான கருவிகள்’
  ‘‘உனக்கு என்ன வேலை தெரியும்?’ என்று நான் கேட்டதற்கு ‘எனக்கு கார் ஓட்டத் தெரியும்’ என்று அவன் பதில் சொன்னான்’

 • 8

  தொழில் அறிவு.

  ‘நெசவு வேலை தெரிந்தவன்’
  ‘எனக்குத் தையல் வேலை தெரியும்’

 • 9

  விரும்பத் தகாத ஒன்றை அல்லது தேவையில்லாத ஒன்றைச் செய்யும் வழக்கம்.

  ‘வதந்தியைப் பரப்புவதையே சிலர் வேலையாகக் கொண்டுள்ளனர்’
  ‘அவசரப்பட்டு எதையாவது செய்துவிட்டுப் பின்னர் வருந்துவதே உனக்கு வேலை’

 • 10

  விரும்பத்தகாத அல்லது முறையற்ற செயல்.

  ‘‘இது யாருடைய வேலை’ என்று அப்பா எங்களைப் பார்த்து உறுமினார்’
  ‘குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வரிடம் கேட்டபோது ‘இது தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும்’ என்றார்’
  ‘இந்த ஏமாற்று வேலையை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’
  ‘நான் என்றுமே காட்டிக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டது இல்லை’

 • 11

  இயற்பியல்
  ஒரு பொருளின் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் இயக்கத்தின் அளவு.