வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வை1வை2வை3

வை1

வினைச்சொல்வைக்க, வைத்து, வைய, வைது

 • 1

  (உடல் உறுப்புகளை உள்ளடக்கிய செயல்கள் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒரு பொருளைக் கையால் அல்லது உபகரணத்தால் எடுத்து ஒரு இடத்தில் விடுவதன்மூலம்) இருக்கச் செய்தல்

   ‘கடிகாரத்தைக் கழற்றி மேஜைமேல் வைத்தான்’
   ‘பணத்தைப் பெட்டியில் வை’
   ‘எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி உச்சந்தலையில் வைத்தாள்’
   ‘போளிக்கு நடுவில் வைக்கும் பூரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்’
   ‘கண்ணி வைத்துக் காடைகளைப் பிடித்தான்’
   ‘கொட்டுவாயில் இந்த மூலிகையை அரைத்து வைத்தால் விஷம் இறங்கிவிடும்’
   ‘தூங்கிக்கொண்டிருந்த பையனின் தலையைத் தூக்கித் தலையணையை அடியில் வைத்தாள்’
   உரு வழக்கு ‘நேரு இந்தப் புத்தகத்தின் மூலம் இந்திய வரலாற்றை நம்முன் வைக்கிறார்’

  2. 1.2 உடல் உறுப்புகள் குறிப்பிட்ட நிலையில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருக்குமாறு செய்தல்

   ‘தன்னுடைய தோளில் கை வைத்தது யார் என்று அவன் திரும்பிப் பார்த்தான்’
   ‘கிழவர் பக்கத்தில் வந்து குத்துக்கால் வைத்து உட்கார்ந்தார்’
   ‘கால்களைத் தூக்கி மேஜையின் மேல் வைத்துக்கொண்டார்’
   ‘வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பார்கள்’

  3. 1.3 (அலங்காரம் செய்துகொள்ளும் முறையில்) (பூ) சூட்டுதல்; (பொட்டு) பதித்தல்; (மை) தீட்டுதல்; (குஞ்சலம் போன்றவற்றை) இணைத்தல்

   ‘குழந்தையின் நெற்றியில் பொட்டு வைத்தாள்’
   ‘தலையில் பூ வைத்துக்கொண்டாள்’
   ‘அவள் தன் தங்கைக்குச் சடை பின்னிக் கண் மை வைத்துவிட்டாள்’

  4. 1.4 (பிறர் பார்க்கும்படியாகவோ காட்சிக்கு உரியதாகவோ ஒன்றை) இருக்கச் செய்தல் அல்லது இடம்பெறச் செய்தல்

   ‘குடியரசுத் தலைவரின் படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்’
   ‘இது அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய அரிய சிற்பம்’
   ‘அமைச்சரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காகக் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது’
   ‘ஒவ்வொரு வருடமும் நான் வரைந்ததைக் கண்காட்சிகளில் வைப்பேன்’

  5. 1.5 (செடி, மரம் முதலியவை) நடுதல் அல்லது வளர்த்தல்; குறிப்பிட்ட பயிரை விவசாயம் செய்தல்

   ‘தோட்டத்தில் தென்னையும் வாழையும் வைத்திருக்கிறேன்’
   ‘பயிர் வைத்தாகிவிட்டது; ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்த பாட்டைக் காணோம்’

  6. 1.6 (புள்ளி முதலியவை) குறித்தல்; (முத்திரை) பதித்தல்; இடுதல்

   ‘வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’
   ‘‘க’ வுக்கு மேல் புள்ளி வைத்தால் ‘க்’’
   ‘முத்திரை வைக்கப்பட்ட அஞ்சல் தலை’

  7. 1.7 (தீ) பற்றச் செய்தல்/(விளக்கு) ஏற்றுதல்

   ‘வைக்கோல் போரில் யாரோ தீ வைத்துவிட்டார்கள்’
   ‘விளக்கு வைக்கிற நேரமாகிவிட்டது’

  8. 1.8 (அடி, அறை) கொடுத்தல்

   ‘அழுதுகொண்டிருந்த குழந்தையின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்’

  9. 1.9 (நடப்பதற்காகக் காலை ஒரு இடத்தில்) பதித்தல்

   ‘பத்து அடி வைப்பதற்குள் மூச்சுவாங்கியது’
   ‘தெருக் கதவைத் திறந்துகொண்டு வராந்தாவில் கால் வைக்கப் போனேன்’
   ‘வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா!’

  10. 1.10 (உணவுப் பொருள், தண்ணீர் போன்றவற்றை) தருதல்

   ‘பசிக்கிறது, சீக்கிரம் சாப்பாடு வை’
   ‘இலையில் சோறு வைப்பதற்கு முன் தண்ணீர் வைக்க வேண்டும்’
   ‘எனக்கு இன்னும் கொஞ்சம் கூட்டு வை’
   ‘இவ்வளவு நேரமாகியும் மாட்டுக்கு வைக்கோல் வைக்கவில்லையா?’

  11. 1.11 (ஒரு இடத்தைத் தகர்ப்பதற்காக வெடிகுண்டு போன்றவற்றை) பொருத்துதல்; புதைத்தல்

   ‘பாறையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்’
   ‘திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரோ புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்’

  12. 1.12 (ஒன்றின் பகுதியாக ஒன்றை) பொருத்துதல்

   ‘பின்புறம் பித்தான் வைத்த கோட்டு’
   ‘கொல்லைக்குக் கதவு வைக்க வேண்டும்’
   ‘பெரிய ஜன்னல் வைத்த அறை’
   ‘கை வைத்த பனியன்’

  13. 1.13 (வணக்கத்தைத் தெரிவிக்கும் விதமாக) நெற்றிப் பகுதிக்குக் கையைக் கொண்டுசெல்லுதல்

   ‘ஆசிரியருக்கு வணக்கம் வைத்தான்’

 • 2

  (உருவாக்குதல் அல்லது ஏற்படுத்துதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (உணவுப் பொருள், வெந்நீர் முதலியவை) தயாரித்தல்

   ‘அம்மா ரசம் வைத்தால் வீடே மணக்கும்’
   ‘பலாப் பழம் போட்டுப் பாயசம் வைத்திருக்கிறேன்’
   ‘குடிப்பதற்கு வெந்நீர் வை’
   ‘உனக்குக் கத்திரிக்காய்க் கூட்டு வைக்கத் தெரியாதா?’

  2. 2.2 (கடவுளுக்கு) படைத்தல்

   ‘சாமிக்குப் படையல் வைக்க வேண்டும்’
   ‘அடுத்த வருடம் மாரியம்மன் கோயிலுக்குப் பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொண்டாள்’

  3. 2.3 (கட்டடம், சிலை போன்றவற்றை) நிறுவுதல்; அமைத்தல்; கட்டுதல்

   ‘அந்தக் காலத்தில் சத்திரங்களையும் மடங்களையும் வைத்து தர்ம காரியங்களைச் செய்தார்கள்’
   ‘உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டிச் சென்னை கடற்கரையில் பல தமிழ் அறிஞர்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டன’
   ‘தீ விபத்து ஏற்பட்டால் தப்பிச்செல்வதற்காக ஒவ்வொரு மாடியிலும் அவசர வழிகள் வைக்கப்பட்டுள்ளன’
   ‘கோயிலுக்கு நான்கு பக்கமும் வாசல் வைத்திருந்தார்கள்’

  4. 2.4 (கடையைப் புதிதாக) ஆரம்பித்தல்; (கடை) நடத்துதல்

   ‘அவர் வெகு நாளாகக் கடை வைத்து நடத்திவருகிறார்’
   ‘சொந்தமாகக் கடை வைக்கிற அளவுக்கு உனக்கு எப்படிப் பணம் கிடைத்தது?’

  5. 2.5 (சம்பளம், கூலி கொடுத்து வேலைக்காக ஒருவரை) ஏற்பாடு செய்தல் அல்லது நியமித்தல்; அமர்த்துதல்

   ‘சமையலுக்கு ஓர் ஆள் வைக்க வேண்டும்’
   ‘நீ வேலைக்கு வைத்திருந்த பையன் எங்கே?’
   ‘இன்னும் நாலைந்து பேரை வைத்துக்கொண்டால் சீக்கிரம் வேலை முடிந்துவிடுமா?’

  6. 2.6 (ஒருவர்) குடும்பம் நடத்துவதற்கு வீடு மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தித் தருதல் அல்லது ஏற்படுத்திக்கொள்ளுதல்

   ‘பையனுக்குத் திருமணத்தை முடித்த கையோடு அவனைத் தனிக்குடித்தனம் வைத்தேன்’
   ‘பெண்ணைக் குடித்தனம் வைத்து ஒரு மாதம்தான் ஆகிறது’
   ‘அவருடைய பையன் கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளேயே தனிக்குடித்தனம் வைத்துவிட்டான்’

  7. 2.7 (தலைமுடி, மீசை, தாடி ஆகியவற்றைக் குறிப்பிட்ட முறையில்) வளர்த்தல்

   ‘என் தாத்தா பாரதியாரைப் போல மீசை வைத்திருப்பார்’
   ‘பிரெஞ்சுக்காரர்கள் பாணியில் நான் தாடி வைத்துக்கொள்ளப் போகிறேன்’

  8. 2.8 (சட்டம், முறை முதலியவற்றை) ஏற்படுத்துதல்

   ‘இங்கு நீ வைத்ததுதான் சட்டமா என்ன?’
   ‘இங்குள்ள வயல்களுக்கு முறை வைத்துதான் தண்ணீர் விடுவார்கள்’
   ‘‘ஒன்றும் தெரியாமலா பெரியவர்கள் நாள், நட்சத்திரம் எல்லாம் வைத்திருக்கிறார்கள்?’ என்று அம்மா கோபத்தோடு கேட்டாள்’

  9. 2.9 (சாட்சி, ஆதாரம், விவரம் முதலியவற்றை) கொண்டிருத்தல்

   ‘அவர் எல்லாவற்றிற்கும் புள்ளிவிவரம் வைத்திருக்கிறார்’
   ‘நீ ஊரில் இருந்தாய் என்பதற்குச் சாட்சி வைத்திருக்கிறாயா?’

  10. 2.10 (ஒருவரை ஓர் இடத்தில்) இருக்கச் செய்தல்

   ‘இளம் குற்றவாளிகள் சிறையில் வைக்கப்படுவதில்லை’
   ‘கைது செய்யப்பட்டவரைப் பத்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்’
   ‘நான் தம்பியை வீட்டில் வைத்துச் சோறு போடுகிறேன்’

  11. 2.11 (ஒன்றை ஞாபகத்தில், மனத்தில்) இருத்துதல்

   ‘நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்’
   ‘படித்ததை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காகச் சிறுசிறு குறிப்புகளை எழுதிக்கொண்டான்’

 • 3

  (நடைபெறச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (போட்டி, பரீட்சை முதலியவற்றை) நடத்துதல்

   ‘இதே போட்டியை மறுபடியும் வைத்தால் அவரே வெற்றிபெறுவாரா?’
   ‘கணக்கு வாத்தியார் வகுப்புத் தேர்வு வைக்கும் நாட்களில் எனக்கு ஜுரம் வந்துவிடும்’
   ‘நாடாளுமன்றத் தேர்தலை மூன்று கட்டமாக வைக்கப்போகிறார்களாம்’

  2. 3.2 (திருமணம், விருந்து, நிகழ்ச்சி போன்றவை) குறிப்பிட்ட நாளில் அல்லது சமயத்தில் நிகழுமாறு ஏற்பாடு செய்தல்

   ‘உங்கள் பெண் திருமணத்தை எந்த மாதம் வைத்திருக்கிறீர்கள்?’
   ‘முதலாளிக்குப் பேரன் பிறந்திருப்பதால் அவர் எங்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தார்’
   ‘இப்போதெல்லாம் கோயில் திருவிழாக்களில் சினிமாப் பாட்டுக் கச்சேரிதான் வைக்கிறார்கள்’
   ‘நம் வீட்டிலும் நவராத்திரிக்குக் கொலு வைக்கலாம்’
   ‘பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்த முறை கோவையில் வைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது’

  3. 3.3 (வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றை) இயங்கச் செய்தல் அல்லது குறிப்பிட்ட விதத்தில் செயல்பட வைத்தல்

   ‘அந்தப் பாட்டை இன்னொரு தடவை வையேன்’
   ‘வானொலியின் சத்தத்தைக் கொஞ்சமாக வைத்துக் கேள்’

  4. 3.4 (அடமானம், பணயம் போன்றவற்றுக்கு ஒன்றை) உட்படுத்துதல்

   ‘வீட்டை அடமானம் வைத்து தனது கடன்களை எல்லாம் மாமா அடைத்தார்’
   ‘மனைவியின் நகையை அடகு வைத்துதான் நான் கடையை ஆரம்பித்தேன்’
   ‘‘பாஞ்சாலியைப் பணயமாக வைக்கிறேன்’ என்றார் தருமர்’
   ‘பணம் வைத்துச் சீட்டு விளையாடாதே’
   ‘வங்கியில் கடன் வாங்க வீட்டை வைக்க வேண்டியிருந்தது’

  5. 3.5 (குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது குறிப்பிட்ட ஒருவருக்காக ஒன்றை) ஒதுக்குதல்; (குறிப்பிடப்படுவது) மிச்சமாகும்படி விட்டுவிடுதல்

   ‘உனக்கென்று வைத்திருந்த புத்தகத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்’
   ‘தட்டில் மீதி வைக்காமல் சாப்பிட வேண்டும்’

  6. 3.6 (வரவு, செலவு போன்றவற்றைக் கணக்கில்) சேர்த்தல் அல்லது குறித்துக்கொள்ளுதல்/(வங்கி போன்றவற்றில் கணக்கை) ஏற்படுத்திக்கொள்ளுதல்

   ‘இந்தப் பணத்தைக் கணக்கில் வைக்க மறந்துவிடாதே’
   ‘தேர்தல் செலவுகளுக்குச் சரிவரக் கணக்கு வைத்திருக்க வேண்டும்’

  7. 3.7 (பங்கிடும் முறையாக அல்லது கூறுபோடும் விதமாக) பிரித்தல்

   ‘கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பொருள்களைச் சரியாகப் பங்குவைத்து எடுத்துக்கொண்டார்கள்’
   ‘மீன்களைக் கூறு வைத்து விற்றாள்’

  8. 3.8 (ஒன்றை) ஒரு குறிப்பிட்ட தன்மையில் அல்லது நிலையில் இருக்கச் செய்தல்

   ‘உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு இந்த மருந்து பயன்படுகிறது’
   ‘முக்கியத் தீவிரவாதி ஒருவனைப் பிடித்த விவரம் அப்போது பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது’
   ‘மனத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (பாசம், அன்பு முதலியவை) கொள்ளுதல்

   ‘அவர் உன்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் தெரியுமா?’
   ‘உன்னிடம் நான் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதே’
   ‘எதன்மீதும் அதிகம் பற்று வைக்காதே’

  2. 4.2 (நட்பு, தொடர்பு முதலியவற்றை) கொள்ளுதல்; ஏற்படுத்துதல்

   ‘கல்லூரி நண்பர்களுடன் இன்னும் தொடர்பு வைத்திருக்கிறேன்’
   ‘தேர்தலுக்காகப் பிற கட்சிகளுடன் உறவு வைத்திருக்கிறோம்’

  3. 4.3 (ஒரு புத்தகம், கட்டுரை போன்றவற்றைப் பாடத்திட்டத்தில்) இடம்பெறச் செய்தல்

   ‘கி. ராஜநாரயணனின் நாவல் ஒன்றை எங்களுக்குப் பாடமாக வைத்திருக்கிறார்கள்’

  4. 4.4 (ஒருவரைக் குறிப்பிட்ட விதத்தில்) பார்த்துக்கொள்ளுதல்; கவனித்துக்கொள்ளுதல்

   ‘அவன் தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான்’
   ‘கடைசிக் காலத்தில் தன் அம்மாவை அவன்தான் வைத்துக் காப்பாற்றினான்’

  5. 4.5 (பிரச்சினை, கேள்வி, கருத்து போன்றவற்றை) முன்வைத்தல்

   ‘என் முன்னே வைக்கப்பட்டுள்ள பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள எனக்கு நேரம் பிடித்தது’
   ‘தொண்டர்கள் வைத்த கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன்’
   ‘பொதுவாக நான் எளிமையாக எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது’
   ‘இந்தத் திட்டத்தின் மூலம் பணக்காரர்கள்தான் பயனடைவார்கள் என்பது போன்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது’

  6. 4.6 (ஒருவருக்குச் சூனியம் போன்றவற்றின் மூலம்) பாதிப்பு ஏற்படும்படியாகச் செய்தல்

   ‘பக்கத்து வீட்டுக்காரன் வைத்த சூனியத்தை எடுப்பதற்காக மந்திரவாதியிடம் போயிருந்தேன்’
   ‘அந்தப் பூசாரி சூனியம் வைப்பதில் கெட்டிக்காரன்’

  7. 4.7பேச்சு வழக்கு (ஒருவருக்கு) சதைபோடுதல்

   ‘ஒரு வருடமாக வீட்டுச் சாப்பாடு என்பதால் அவனுக்கு நன்றாகச் சதை வைத்துவிட்டது’

வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வை1வை2வை3

வை2

துணை வினைவைக்க, வைத்து, வைய, வைது

 • 1

  செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் ஓர் ஆக்கவினை.

  ‘குழந்தையைத் தூங்கவை’
  ‘புகை கண்களில் நீரை வரவைத்தது’

 • 2

  குறிப்பிடப்படும் நிலையில் முதன்மை வினையின் செயல் நீட்டிக்கப்படுவதைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை.

  ‘புகையிலையை வாயில் ஒதுக்கிவைத்துக்கொண்டார்’
  ‘அவரைப் போட்டியிலிருந்து விலக்கிவைத்திருக்கிறார்கள்’

 • 3

  செய்வதால் நேரும் நன்மை கருதி அல்லது செய்யாமலிருப்பதால் நேரும் விளைவு கருதி முன்னேற்பாடாக ஒன்று செய்யப்படுவதைத் தெரிவிக்கும் துணை வினை.

  ‘எண்ணெய் விலை குறைந்திருக்கிறது, வாங்கிவைத்துக்கொள்’
  ‘அவருடைய கோபத்திலிருந்து தப்புவதற்காகச் செய்துவைத்த ஏற்பாடுதான் இது’
  ‘சொத்துகளையெல்லாம் ஒரு ஆசிரமத்தின் பேரில் எழுதிவைத்திருக்கிறார்’

 • 4

  தொல்லை தரும் நிகழ்ச்சி, ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் முதலியவற்றைக் குறித்துத் தன் விருப்பமின்மையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘படிக்கட்டில் நின்று பயணம்செய்கிறீர்கள், விழுந்துவைத்தீர்கள் என்றால் நான் அல்லவா பொறுப்பு?’
  ‘ருசி இல்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டுவைத்தேன்’

வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வை1வை2வை3

வை3

வினைச்சொல்வைக்க, வைத்து, வைய, வைது

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு திட்டுதல்.

  ‘பேசிய கூலியைக் கொடுக்கவில்லை என்றால் வையாமல் வாழ்த்தவா செய்வான்?’
  ‘எப்போது பார்த்தாலும் பிள்ளையை வைதுகொண்டிருக்காதீர்கள் என்று அம்மா சத்தம் போட்டாள்’