தமிழ் -ஆம் யின் அர்த்தம்

-ஆம்

துணை வினை

 • 1

  (-அல் விகுதி ஏற்ற வினை வடிவத்துடன் சேர்க்கப்படும்போது) சாத்தியம் இருத்தல், அனுமதித்தல், அனுமானித்தல், யோசனை கூறுதல், முடிவெடுத்தல் போன்ற பொருளைத் தரும் ஒரு துணை வினை.

  ‘விதியை மீறியதற்காக அவர் தண்டிக்கப்படலாம்’
  ‘இன்று மழை வரலாம்’
  ‘நேர்முகத் தேர்வு முடிந்தது. நீங்கள் அனைவரும் போகலாம்’
  ‘இனி நீங்கள் முட்டை சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறினார்’
  ‘அவர் தற்போது நம் அலுவலகத்துக்கு நடந்து வந்துகொண்டிருக்கலாம்’
  ‘நேற்று இன்னேரம் அவர் ரயில் ஏறியிருக்கலாம்’
  ‘நீ சங்கீதம் கற்றுக்கொள்ளலாம்’
  ‘நீ அவருக்குக் கூட நூறு ரூபாய் கொடுத்திருக்கலாம்’
  ‘நாம் வீட்டுக்குப் போகலாம்’
  ‘உனக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்துவிடலாம்’
  ‘இப்போதே புறப்பட்டால் இருட்டுவதற்குள் வீட்டிற்குச் சென்றுவிடலாம்’

தமிழ் -ஆம் யின் அர்த்தம்

-ஆம்

இடைச்சொல்

 • 1

  ஒரு வாக்கியம் தெரிவிக்கும் செய்தி பிறர் வழியாகத் தெரியவந்தது என்பதை உணர்த்துவதற்காக அந்த வாக்கியத்தின் பயனிலையுடன் சேர்க்கப்படும் இடைச்சொல்.

  ‘அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டையாம்’
  ‘இயற்கையான மரணம் இல்லையாம். தற்கொலையாம்’

 • 2

  ஒரு கூற்றின் உண்மையை ஏற்பதில் ஒருவருக்கு உள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக ஒரு வாக்கியத்தின் பயனிலையோடு சேர்க்கப்படும் இடைச்சொல்.

  ‘குடிசைபோல் ஒரு கட்டடம். இது பள்ளிக்கூடமாம்’
  ‘அவர் நல்லவராம். அவரை நம்பலாமாம்’

 • 3

  (எண்ணுப்பெயர்களோடு இணைக்கப்படும்போது) ஒன்று ஒரு வரிசையில் அமைந்திருக்கும் நிலையைக் காட்டுவதற்குக் குறிப்பிட்ட சொல்லோடு சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல்; ‘ஆவது’.

  ‘எட்டாம் தேதி’
  ‘இரண்டாம் வகுப்பு’