தமிழ் -ஓ யின் அர்த்தம்

-ஓ

இடைச்சொல்

  • 1

    ஒரு வாக்கியத்தில் மாற்றாக இருக்கும் தொடர்களோடு இணைக்கப்பட்டு ‘அல்லது’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘பணமாகவோ பொருளாகவோ தரலாம்’
    ‘இது மாறுபாடோ முரண்பாடோ இல்லை’

  • 2

    இன்னார் அல்லது இன்னது என்று உறுதியாகக் குறிப்பிட முடியாத நிலையைத் தெரிவிக்க வினாப் பெயர்களோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

    ‘அவர் எங்கோ போயிருக்கிறார்’
    ‘யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது’
    ‘எப்படியெல்லாமோ நடக்கிறது’

  • 3

    சந்தேகத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உணர்த்தப் பயனிலையோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

    ‘பணத்தை நான் எடுத்துச் செலவழித்துவிட்டதாக நினைப்பார்களோ?’
    ‘அவர்கள் வராமல் இருந்துவிடுவார்களோ என்று பயந்தான்’

  • 4

    இயல்புக்கு மாறானது அல்லது மாறானவை என்பதைத் தனிப்படுத்திக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘தீபாவளியன்று ஊரில் ஒரே கொண்டாட்டம். ஆனால் அவன் வீடோ சோகத்தில் ஆழ்ந்திருந்தது’
    ‘அவனோ குடிகாரன், அவனிடம் என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும்?’
    ‘எனக்குச் சொல்வதற்கு நிறைய செய்தி இருக்கிறது. ஆனால் அவருக்கோ கேட்பதற்கு நேரமில்லை’

  • 5

    முதல் தொடரில் ஒன்றைத் தனிப்படுத்திக் காட்டி அதை இரண்டாவது தொடரோடு தொடர்புபடுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘நான் எதைச் செய்யச் சொன்னேனோ, அதைச் செய்’