தமிழ் அடங்கு யின் அர்த்தம்

அடங்கு

வினைச்சொல்அடங்க, அடங்கி

 • 1

  (கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியவற்றின் தீவிரம்) தணிதல்; குறைதல்.

  ‘அவளுடைய ஆவேசமும் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை’
  ‘வியர்வை அடங்கியதும்தான் குளிக்க வேண்டும்’

 • 2

  (ஒன்று வெளிவராமல்) உள்ளுக்குள் இருந்துவிடுதல்.

  ‘கேள்வி மனத்தில் எழுந்த வேகத்திலேயே அடங்கிவிட்டது’

 • 3

  (உயிர், மூச்சு) நின்றுபோதல்; ஒடுங்குதல்.

  ‘மூச்சு அடங்கும்வரை தன் மகன் நினைவாகவே இருந்தார்’

 • 4

  (ஓசை, ஆரவாரம்) ஓய்தல்; (குரல்) அமுங்குதல்.

  ‘காலை நேர ஓசைகள் ஒருவாறு அடங்கின’
  ‘அவளது குரல் அடங்கி ஒலித்தது’

 • 5

  (ஒன்றின் கீழ் அல்லது ஒன்றின் உள்) அமைதல்; வரையறைக்கு உட்படுதல்.

  ‘பொது ஊழியர் என்ற விளக்கத்தில் நகரசபை ஆணையாளரும் அடங்குவார்’
  ‘முத்திரை நாணயங்கள் அடங்கிய ஒரு புதையல் அகப்பட்டது’
  ‘உன் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்கிறது’
  ‘இருபது கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் அடுத்த மாதம் வெளியாகும்’
  ‘ஒரே கட்டுரையில் இவ்வளவு தகவல்களும் அடங்கியிருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது’

 • 6

  (குறிப்பிட்ட அளவில்) கொள்ளுதல்.

  ‘கைக்கு அடங்குகிற அளவுள்ள ஒரு மாம்பழம்’
  ‘இவ்வளவு துணிகளும் பெட்டியில் அடங்காது’

 • 7

  கீழ்ப்படிதல்; பணிந்து போதல்.

  ‘பெற்றோருக்கு அடங்கிய பையன்’

 • 8

  சார்ந்திருத்தல்.

  ‘நஷ்டத்தை லாபமாக்குவதில்தான் உன் திறமையே அடங்கியிருக்கிறது’