தமிழ் இறங்கு யின் அர்த்தம்
இறங்கு
வினைச்சொல்
- 1
மேலிருந்து (கீழே) வருதல்.
‘பேச்சை முடித்துவிட்டு அவர் மேடையிலிருந்து கீழே இறங்கினார்’‘குரங்கு மரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது’ - 2
(வடிகட்டும்போது) சொட்டுசொட்டாகக் கீழே வருதல்.
‘வடிகட்டியிலிருந்து சாறு சிறிதுசிறிதாகத்தான் இறங்கும்’ - 3
(வாகனத்திலிருந்து) வெளிவருதல்.
‘காரிலிருந்து தலைவர் இறங்கியதும் தொண்டர்கள் மாலை அணிவித்தார்கள்’ - 4
(பொருள்களின் விலை) குறைதல்.
‘நல்லெண்ணெயின் விலை சற்று இறங்கியிருக்கிறது.’ - 5
(காய்ச்சல், சூடு) தணிதல்.
‘நான்கு நாள் ஆகியும் குழந்தைக்குக் காய்ச்சல் இறங்கவில்லை’ - 6
(குரலின் ஒலி) தாழ்தல்.
‘‘நான் தவறு ஏதும் செய்யவில்லை’ என்று அவன் சொன்னபோது குரல் இறங்கி ஒலித்தது’ - 7
(ஒரு செயலில் முனைப்போடு) ஈடுபடத் தொடங்குதல்.
‘கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்’‘தயங்காமல் துணிந்து வியாபாரத்தில் இறங்கு’ - 8
நீர்ப்பரப்பினுள் செல்லுதல்.
‘ஆற்றில் சுழிப்பு அதிகமாக இருக்கிற பகுதியில் இறங்க வேண்டாம்’ - 9
(சுவரில் ஆணி, சேற்றில் சக்கரம்) உட்செல்லுதல்.
‘சுவரில் ஆணி இறங்கவில்லை’‘சேற்றில் இறங்கியிருந்த வண்டிச் சக்கரத்தைத் தூக்கிவிட்டோம்’ - 10
(ஓர் இடத்தில்) வந்துசேர்தல்.
‘கூட்டுறவு அங்காடியில் ஐம்பது மூட்டை அரிசி வந்து இறங்கியிருக்கிறது’‘கலவரம் நடந்த இடத்தில் ராணுவத்தினர் வந்து இறங்கியிருக்கிறார்கள்’ - 11
(உணவு) உட்செல்லுதல்.
‘நோயாளிக்குக் குழாய் வழியாகத்தான் ஆகாரம் இறங்குகிறது’ - 12
(உணவை) சாப்பிட முடிதல்.
‘கருவாடு இருந்தால்தான் எனக்குச் சாப்பாடு இறங்கும்’‘கவலை அதிகமானால் சாப்பாடு இறங்காது’ - 13
(பிராணிகளின் விஷத்தைக் குறிப்பிடுகையில்) நீங்குதல்.
‘பாம்பு கடித்த உடனேயே முதலுதவிசெய்ததால் விஷம் இறங்கிவிட்டது’ - 14
(சீட்டாட்டத்தில் ஒருவர் தன் முறை வரும்போது) விளையாடுதல்.
‘இப்போது யார் கை இறங்க வேண்டும்?’ - 15
(கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நிலையில் ஒரு ஆட்டக்காரர்) விளையாட வருதல்.
‘துவக்க ஆட்டக்காரராக இறங்கிய தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடிச் சதம் அடித்தார்’ - 16
(அடைக்கப்பட்டிருக்கும் காற்று) வெளியேறுதல்.
‘சைக்கிள் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது’