தமிழ் உட்கார் யின் அர்த்தம்

உட்கார்

வினைச்சொல்உட்கார, உட்கார்ந்து

 • 1

  (மனிதன்) இடுப்பின் கீழ்ப்பகுதியை ஒரு பரப்பில் வைத்து இருத்தல்; (விலங்குகள்) உடலை ஒரு பரப்பில் வைத்து நிலைகொள்ளுதல்; (பறவைகள்) இரு கால்களையும் பதித்து நிலைகொள்ளுதல்.

  ‘மாலை மணி ஐந்தானதும் நாய் வாசல் கதவருகில் உட்கார்ந்துகொள்ளும்’
  ‘மரக் கிளைகளில் காக்கைகள் உட்கார்ந்திருந்தன’

 • 2

  (கட்டடத்தின் அஸ்திவாரம்) கீழிறங்குதல்.

  ‘களிமண் நிலமாக இருந்ததால் வீடு உட்கார்ந்துவிட்டது’

 • 3

  (தேர்வு) எழுதுதல்.

  ‘அடுத்த வருடம் அவன் மருத்துவப் பரீட்சைக்கு உட்காரப்போகிறான்’

 • 4

  (இரண்டு பகுதிகள்) ஒன்றோடு ஒன்று பொருந்துதல்.

  ‘கதவு இன்னும் கீலில் சரியாக உட்காரவில்லை’

 • 5

  பேச்சு வழக்கு (பெண்) பருவமடைதல்.

  ‘மூத்தவள் இன்னும் இரண்டு வருடங்களில் உட்கார்ந்துவிடுவாள்’

 • 6

  பேச்சு வழக்கு மாதவிடாய் ஏற்படுதல்.

  ‘பொங்கலுக்கு நீயாவது பூஜை செய்வாய் என்று நினைத்தேன். நீயும் உட்கார்ந்துவிட்டாயா?’

 • 7

  பேச்சு வழக்கு (தேர்வில்) தோல்வியடைதல்.

  ‘ஆறாம் வகுப்பிலேயே அவன் இரண்டு முறை உட்கார்ந்துவிட்டான்’

 • 8

  பேச்சு வழக்கு (ஒன்று ஒரு இடத்தில்) பொருந்துதல் அல்லது பொருத்தமாக அமைதல்.

  ‘பல்லவிக்கு நான் அமைத்த மெட்டில் ‘புன்சிரிப்பு’ என்ற வார்த்தை உட்கார மாட்டேன் என்கிறது’
  ‘திருகு அதன் ஓட்டைக்குள் சரியாக உட்காரவில்லை’