எடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எடு1எடு2

எடு1

வினைச்சொல்எடுக்க, எடுத்து

 • 1

  (ஒன்று இருக்கும் நிலையை மாற்றுவது தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஏதேனும் ஒன்றை) தூக்குதல்/(ஒரு செயலுக்குப் பயன்படும் விதத்தில் ஒன்றை) பிடித்தல்

   ‘தரையில் பளபளப்பாகக் கிடந்ததைக் குனிந்து எடுத்துப் பார்த்தான்’
   ‘வண்டியிலிருந்து சாமான்களை எடுத்து உள்ளே வை’
   ‘அழுகிற குழந்தையை எடுக்காமல் எங்கே போய்விட்டாள்?’
   ‘அந்தக் காலத்தில் ஆசிரியர் பிரம்பை எடுத்தால் மாணவர்கள் நடுங்குவார்கள்’
   ‘வாள் எடுத்துப் போரிடத் தெரியாத வீரன்’
   ‘கண்ணில் தூசு விழுந்துவிட்டதால் கைக்குட்டையால் ஒத்தி எடுத்தான்’

  2. 1.2 (தோற்றம், வடிவம், பிறவி முதலியவை) அடைதல்

   ‘விபத்தில் தப்பியது மறுபிறவி எடுத்ததுபோல் இருக்கிறது’
   ‘தண்ணீர்ப் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது’
   ‘திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம்’
   ‘இந்தப் படத்தில் அவர் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்’

  3. 1.3 (கடைதல், பிழிதல் போன்றவற்றால் அல்லது வேதியியல் முறைப்படி ஒன்றிலிருந்து) பிரித்துப் பெறுவதன் மூலம் ஒன்றைத் தயாரித்தல்

   ‘தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைக் கிராமத்தில் இன்றும் பார்க்கலாம்’
   ‘கரும்பிலிருந்து சாறு எடுத்து வெல்லம், ஜீனி போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்’
   ‘கீழாநெல்லியிலிருந்து மஞ்சள் காமாலைக்கு மருந்து எடுக்கிறார்கள்’
   ‘நோய் எதிர்ப்புச் சக்திக்கான சில மருந்துகள் விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படுகின்றன’

  4. 1.4 (ஒரு நிலையிலிருந்து கையை, காலை) விலக்குதல்

   ‘வழியில் கால் நீட்டிக்கொண்டிருக்கிறாயே, காலை எடு’
   ‘தோள்மீது வைத்திருந்த கையை எடுக்காமலேயே நடந்து வந்தார்’
   உரு வழக்கு ‘அவள் மேலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை’

  5. 1.5 (சிறையில் இருப்பவரை ஜாமீனில்) வெளியில் கொண்டுவருதல்

   ‘என்னை வெளியில் எடுக்க யாருமே வரவில்லை என்று புலம்பினான் அந்தக் கைதி’
   ‘திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட தன் தம்பியை ஜாமீனில் எடுப்பதற்காக அவர் முயன்று வருகிறார்’

 • 2

  (வசமாக்கிக்கொள்ளுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பணம் கொடுத்து ஒன்றை) வாங்குதல்

   ‘தீபாவளிக்குத் துணி எடுத்துவிட்டீர்களா?’
   ‘மரம் எடுக்கக் கொல்லத்துக்குப் போயிருக்கிறார்’
   ‘எதை எடுத்தாலும் இரண்டு ரூபாய்’
   ‘பயணச்சீட்டு எடுப்பதற்காக எல்லாரும் வரிசையில் நின்றிருந்தார்கள்’
   ‘உலகப் புகழ்பெற்ற ஓவியம் ஒன்றைப் பல கோடி ரூபாய்க்குப் பிரபல தொழிலதிபர் ஏலத்தில் எடுத்திருக்கிறார்’

  2. 2.2 ஒரு இடத்தில் இருக்கும் பணம், பொருள் போன்றவற்றை ஒருவர் தன்னிடத்தில் வரச்செய்தல்

   ‘பால்காரருக்குக் கொடுக்க வைத்திருந்த ஐம்பது ரூபாயில் பத்து ரூபாயை யார் எடுத்தது?’
   ‘பெட்டியில் ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதிலிருந்து இருநூறு எடுத்துக்கொள்’
   ‘எங்கள் வங்கியில் பணம் போடவும் எடுக்கவும் ஆகும் நேரம் சில நிமிஷங்கள்தான்’
   ‘பலாப்பழத்திலிருந்து சுளையை எடுத்துக்கொடு’

  3. 2.3 (தோண்டுதல், மூழ்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் ஒன்றை) பெறுதல்

   ‘நெய்வேலியில் எடுக்கப்படுவது பழுப்பு நிலக்கரியாகும்’
   ‘வளைகுடா நாடுகளில்தான் அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது’
   ‘தம்பி! கிணற்றுக்குள் வாளி விழுந்துவிட்டது. கொஞ்சம் எடுத்துத் தருகிறாயா?’
   ‘கடலில் மூழ்கிச் சங்கு எடுப்பவர்கள்’
   உரு வழக்கு ‘ஆன்மீகக் கடலில் மூழ்கி அவர் எடுத்த முத்துக்களின் தொகுப்புதான் இந்நூல்’

  4. 2.4 (தேர்வில் மதிப்பெண்கள் அல்லது விளையாட்டுப் போட்டியில் புள்ளிகள்) பெறுதல்

   ‘கணக்குப் பாடத்தில் சுலபமாக நூற்றுக்கு நூறு எடுக்கலாம்’
   ‘சச்சின் டெண்டுல்கர் பத்தொன்பது பந்துகளில் இருபது ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்’

  5. 2.5 (செலவழித்த பணம், போட்ட முதலீடு போன்றவற்றை அல்லது லாபத்தை) ஈட்டுதல்

   ‘படம் சரியாக ஓடாததால் போட்ட பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை’
   ‘இந்த வருடமாவது எதிர்பார்த்த அளவு லாபத்தை எடுக்க முடியுமா?’

  6. 2.6 (வீடு, வண்டி முதலியவற்றை) அமர்த்துதல்

   ‘வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்’

  7. 2.7 (விடுப்புக் கேட்டு) பெறுதல்

   ‘நண்பனின் திருமணத்திற்காக மூன்று நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறேன்’
   ‘தொழிலாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்தால் உற்பத்தி பாதிக்கப்படும்’

  8. 2.8பேச்சு வழக்கு (வானொலி, தொலைக்காட்சி போன்றவை அலைவரிசைகளை ஏற்று) செயல்படுதல்

   ‘தூர்தர்ஷன் நேற்றிலிருந்து சரியாகவே எடுக்கவில்லை’
   ‘உங்கள் வானொலியில் திருச்சி பண்பலை எடுக்கிறதா?’

  9. 2.9 (சிகிச்சை) பெறுதல்

   ‘பத்து நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டதால்தான் நான் இப்போது தேறியிருக்கிறேன்’
   ‘யாரிடம் நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள்?’

  10. 2.10 (உரிய அனுமதி இல்லாமல் ஒன்றை) வசமாக்கிக்கொள்ளுதல்

   ‘என்னுடைய பையிலிருந்து பத்து ரூபாயை யார் எடுத்தது?’
   ‘அரசாங்கப் பணத்தை எடுத்ததற்காக அவர்மீது வழக்குப் போடப்பட்டது’
   ‘என் புத்தகத்தை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்’

 • 3

  (சேகரித்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (விவரங்களை) கணக்கிட்டுக் குறித்தல் அல்லது சேகரித்தல்

   ‘ஜன்னல்களுக்குத் திரைபோட அளவு எடுக்க வேண்டும்’

  2. 3.2 (ஓர் இடத்திலிருந்து அல்லது பல இடங்களுக்குத் தேடிச் சென்று ஒன்றை) சேகரித்தல்

   ‘குளத்தில் தண்ணீர் எடுக்கப் போகலாமா?’
   ‘பருத்தி எடுக்க ஆட்கள் வருகிறார்கள்’
   ‘தோட்டத்திலிருந்து பூ எடுத்து வந்து பூஜை செய்வது வழக்கம்’
   ‘முன்பெல்லாம் சலவைத் தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று துணி எடுப்பார்கள்’
   ‘வீடுவீடாகச் சோறு எடுத்துச் சாப்பிடும் இராப்பிச்சைக்காரன்’
   ‘நேற்று குப்பை எடுப்பவர்கள் யாரும் வரவேயில்லை’

  3. 3.3 (புத்தகம், கோப்பு முதலியவற்றைப் பிரித்து ஒரு பகுதியை) தேடிப் பார்த்தல்

   ‘ஐம்பதாம் பக்கத்தை எடு’

  4. 3.4 (பிற படைப்புகளிலிருந்து ஒரு அம்சத்தையோ பகுதியையோ) பயன்படுத்துதல்

   ‘இந்த உத்தியை ஒரு பிரெஞ்சு நாவலிலிருந்து எடுத்துக்கொண்டேன்’
   ‘இந்த மேற்கோள் கம்ப ராமாயணத்திலிருந்து எடுத்தது என்றார்’

  5. 3.5 (ஒன்றை) தேர்ந்தெடுத்தல்

   ‘துணைப்பாடமாக அவர் சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்கிறார்’
   ‘குளிர்பானங்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன’

 • 4

  (ஒன்றை உருவாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (கோயில்) கட்டுதல்; (சுவர்) எழுப்புதல்

   ‘ராஜராஜன் தஞ்சையில் கோயில் எடுத்தான்’
   ‘எங்கள் வீட்டைச் சுற்றிச் சுவர் எடுக்க இருபதாயிரம் ரூபாய் ஆயிற்று’

  2. 4.2 (திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒளிப்பதிவின் மூலம்) உருவாக்குதல்; (புகைப்படம்) பிடித்தல்; (பிரதி) தயாரித்தல்

   ‘திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் எடுத்த குறும்படம் இது’
   ‘மதக் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட விவரணப்படத்தைத் தணிக்கைக் குழு அனுமதிக்கவில்லை’
   ‘இந்த விண்ணப்பத்தைப் பிரதி எடுத்து வைத்துக்கொள்’
   ‘இது நான் போன வருடம் எடுத்துக்கொண்ட புகைப்படம்’

  3. 4.3 (வகிடு) உண்டாக்குதல்

   ‘ஏன் திடீரென்று நேர் வகிடு எடுத்திருக்கிறாய்?’

 • 5

  (நீக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 5.1 (பிணத்தை) தூக்கிச்செல்லுதல்; அகற்றுதல்

   ‘மூத்த மகன் வரும்வரை தாயின் உடலை எடுக்காமல் வைத்திருந்தார்கள்’

  2. 5.2 (இருந்ததை) அப்புறப்படுத்துதல்/(வெட்டுவது, அறுப்பது முதலியவை மூலமாக) நீக்குதல்

   ‘ஏன் மீசையை எடுத்துவிட்டாய்?’
   ‘குழாயில் இருக்கும் அடைப்பை எடுத்த பிறகு தண்ணீர் ஒழுங்காக வருகிறது’
   ‘‘கைகாலை எடுத்துவிடுவேன்’ என்று அவன் மிரட்டினான்’
   ‘மகனுடைய சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்கு வைத்திருக்கிறார்கள்’

  3. 5.3 (சிக்கு, முடிச்சு போன்றவற்றை) பிரித்தல்

   ‘நூலில் விழுந்துவிட்ட முடிச்சை எடுக்க அரைமணி நேரமா?’

  4. 5.4 (நடைமுறையில் இருப்பதை அல்லது நடைபெற்றுவருவதை) முறைப்படி நீக்குதல் அல்லது விலக்குதல்

   ‘மதுவிலக்கை எடுப்பதுபற்றி ஒரு தெளிவான முடிவு வேண்டும்’
   ‘இன்றோடு அந்தப் படத்தை எடுத்துவிடுவார்கள்’

  5. 5.5 (மந்திரவாதி போன்றவர்களிடம் சென்று செய்வினை, பில்லிசூனியம் போன்றவை) செயல்படாதவாறு நீக்குதல்

   ‘பக்கத்து வீட்டுக்காரி வைத்த செய்வினையை எடுப்பதற்காக அம்மா பூசாரியிடம் போயிருக்கிறாள்’

 • 6

  (மேற்கொள்ளுதல் தொடர்பான வழக்கு)

  1. 6.1 (காவலில்) வைத்தல்

   ‘நகைக்கடைக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் காவலில் எடுக்கப்பட்டார்’
   ‘நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டவரை ஐந்துநாள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்தது’

  2. 6.2 (முடிவை) தீர்மானித்தல்

   ‘அமைச்சரவைக் கூட்டம் எடுத்த முடிவைப் பத்திரிகைகள் விரிவாக விமர்சித்திருந்தன’

  3. 6.3 (ஏதேனும் ஒரு செயல் பாட்டை) மேற்கொள்ளுதல்

   ‘அவனுக்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீண்’
   ‘விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக மனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்’
   ‘போன முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கத்தைப் பற்றிய ஒரு எச்சரிக்கை ஆகும்’
   ‘உனக்கு யார் பாட்டு வகுப்பு எடுக்கிறார்கள்?’
   ‘எடுத்த காரியத்தை முடித்துவிட வேண்டும்’
   ‘தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு விழா எடுக்கப்பட்டது’

  4. 6.4 (உறுதிமொழி) ஏற்றல்

   ‘புதிய அமைச்சர்கள் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்’
   ‘இனிமேல் குடிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டான்’
   ‘அவர் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றும்வரை ஓயப்போவது இல்லை என்றார்’

 • 7

  (பிற வழக்குகள்)

  1. 7.1 (ஒன்றை) உட்கொள்ளுதல்

   ‘இந்த மாத்திரையை ஒழுங்காக எடுத்துக்கொள்கிறீர்களா?’
   ‘இந்த மருந்தை ஒரு அறுபது நாள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் சளிப் பிரச்சினை வரவேவராது’
   ‘மாடு மூன்று நாட்களாகவே சரியாகத் தீவனம் எடுக்கவில்லை’

  2. 7.2 (வாகனத்தை) கிளப்புதல்/(வாகனத்தை) பயன்படுத்துதல்

   ‘‘நேரமாயிற்று. வண்டியை எடுங்கள்’ என்று நடத்துநர் கூறினார்’
   ‘என் சைக்கிளை நீ எடுத்துக்கொண்டுபோ’
   ‘என்னைக் கேட்காமல் யார் என் வண்டியை எடுத்துக் கொண்டு போனது?’

  3. 7.3 (காலம்) பிடித்தல்; செலவாதல்

   ‘இதை முடிப்பதற்கு நிறைய நேரம் எடுத்துவிட்டது’
   ‘நான்கு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் வேலை சுத்தமாக இருக்க வேண்டும்’

  4. 7.4பேச்சு வழக்கு (ஒருவர் கேட்கும் குறிப்பிட்ட தொகையை) தருதல்; கொடுத்தல்

   ‘நான் பேரம்பேசியதும் கடைக்காரன் பத்து ரூபாய் எடுங்கள் என்று கடைசியில் சொன்னான்’

  5. 7.5பேச்சு வழக்கு எடுபடுதல்

   ‘என் பேச்சு அங்கே எடுக்குமா என்று தெரியவில்லை!’

  6. 7.6 எடுப்பாக இருத்தல்

   ‘கருப்பு நிறத்திற்கு வெள்ளைதான் நன்றாக எடுக்கும்’

  7. 7.7 (ஒன்றைப் பற்றிய பேச்சை) ஆரம்பித்தல்

   ‘அவன் பேச்சை இங்கு எவனும் எடுக்கக்கூடாது என்று மிரட்டினார்’
   ‘கல்யாணத்தைப் பற்றிய பேச்சை எடுத்தாலே தன் மகன் நழுவுவதாகப் பெரியவர் குறைபட்டுக்கொண்டார்’

  8. 7.8 (குழி, பள்ளம் போன்றவை) தோண்டுதல்

   ‘தென்னங்கன்று நட இரண்டரையடி ஆழத்துக்கு ஒரு குழி எடுக்க வேண்டும்’

  9. 7.9 (திரையரங்கில் படத்தை) காட்டுதல்

   ‘இந்தத் திரையரங்கத்தில் எப்போதுமே புதுப் படங்களைத்தான் எடுப்பார்கள்’

  10. 7.10 உறிஞ்சுதல், பிரித்தல் மூலம் ஒன்றை ஒன்றிலிருந்து பெறுதல்

   ‘காற்றிலுள்ள கரியமிலவாயுவை ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் எடுத்துக்கொள்கின்றன’
   ‘வேர்கள் தங்களுக்குத் தேவையான அளவு நீரை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றன’

எடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எடு1எடு2

எடு2

துணை வினைஎடுக்க, எடுத்து

 • 1

  சில வகைப் பெயர்ச்சொற்களோடு இணைந்து ‘உண்டாதல்’, ‘தொடங்குதல்’, ‘நிகழ்த்துதல்’ முதலிய பொருளில் அவற்றை வினையாக்கும் வினை.

  ‘பசியெடு’
  ‘பயமெடு’
  ‘ஓட்டமெடு’
  ‘உதறலெடு’
  ‘நடுக்கமெடு’

 • 2

  முதன்மை வினையின் தொழில் ஒரு தீவிரத் தன்மையுடன் செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் ஒரு துணை வினை.

  ‘அரித்தெடு’
  ‘குடைந்தெடு’
  ‘பிய்த்தெடு’
  ‘வாட்டியெடு’

 • 3

  உயர் வழக்கு ஒரு செயலை முழு மனத்தோடு செய்யும் முயற்சியைக் குறிக்க வினைச்சொல்லோடு இணைக்கப்படும் துணை வினை.

  ‘நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டதால், என்னை வளர்த்தெடுக்க என் தாய் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல’
  ‘ஆட்சியை வென்றெடுக்க நம் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்’