எரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எரி1எரி2

எரி1

வினைச்சொல்எரிய, எரிந்து, எரிக்க, எரித்து

 • 1

  (வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்றவைக்கப்பட்டு) நெருப்பு வெளிப்படுதல்; (தீ) சுவாலையுடன் மேலெழுதல்.

  ‘காய்ந்த சுள்ளிகளைப் போட்டதும் அடுப்பில் தீ நன்றாக எரிந்தது’
  ‘திடப்பொருள்கள் எரியும்போது கிடைப்பதைவிட நீர்மப் பொருள்களும் வாயுக்களும் எரியும்போது கிடைக்கும் வெப்ப ஆற்றல் அதிகம்’
  ‘விறகு ஈரமாக இருந்ததால் அடுப்பு சரியாக எரியவில்லை’

 • 2

  (விளக்கு முதலியவை) ஒளிவிடுதல்; ஒளிர்தல்.

  ‘குன்றின் மேல் ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருந்தது’
  ‘தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன’

 • 3

  தீயினால் அழிதல்; நெருப்புக்கு இரையாதல்.

  ‘மரங்கள் பற்றி எரிந்துகொண்டிருந்தன’
  ‘தொழிற்சாலை எரிந்துபோனதில் பெரும் நஷ்டம்’
  ‘தீ விபத்தில் அவர் உடல் எரிந்து கருகிவிட்டது’

 • 4

  (உடல் உறுப்புகளில் அல்லது உடலில் ஏற்பட்ட புண், கொப்புளம் முதலியவற்றில்) எரிச்சல் உண்டாதல்.

  ‘எரியும் புண்ணில் மருந்து போடு’
  ‘புகையால் கண் எரிகிறது’

எரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எரி1எரி2

எரி2

வினைச்சொல்எரிய, எரிந்து, எரிக்க, எரித்து

 • 1

  (வெப்பத்தைப் பெறுவதற்காக விறகு, எண்ணெய் போன்ற எரிபொருளை) பற்றவைத்தல்.

  ‘சாண எரிவாயுவை எரிக்கும்போது புகை வராது’
  ‘நிலக்கரியை எரித்துப் பெறப்படும் வெப்ப ஆற்றல் ரயில்களை இயக்கப் பயன்பட்டது’

 • 2

  (விளக்கு முதலியவற்றை) ஒளிரச் செய்தல்.

  ‘விளக்கை ஏன் இப்படி அனாவசியமாக எரிக்கிறீர்கள்?’
  ‘மின்சாரம் விளக்கு எரிக்க உதவுகிறது’

 • 3

  (ஒன்றை) தீயினால் அழித்தல்; நெருப்புக்கு இரையாக்குதல்.

  ‘போகிப் பண்டிகை நாளில் வேண்டாத பொருள்களைக் குவித்துவைத்து எரிப்பார்கள்’
  ‘பிணத்தை எரிப்பதுதான் எங்கள் வழக்கம்’
  ‘அவன் அவளை எரித்துவிடுவதுபோல் பார்த்தான்’

 • 4

  தகித்தல்; சுடுதல்.

  ‘என்ன, வெயில் இப்படி எரிக்கிறதே என்று அவர் அலுத்துக்கொண்டார்’

 • 5

  (செங்கல், பானை முதலியவற்றை நெருப்பில்) சுடுதல்.

  ‘செங்கற்களைச் சூளையில் இட்டு எரிக்கும் முன் நன்றாக உலர்த்த வேண்டும்’
  ‘ஓடுகள் சரியாக எரிக்கப்படாததால் உடைந்துபோய்விடுகின்றன’

 • 6

  (உடலுக்குள்) கொழுப்பு, புரதம் போன்றவை ஆற்றலாக மாற்றப்படுதல்.

  ‘சில சமயங்களில் சக்திக்காக உடலில் கொழுப்பு அல்லது புரதம் அதிக அளவில் எரிக்கப்படலாம்’