எழு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழு1எழு2

எழு1

வினைச்சொல்எழ, எழுந்து

 • 1

  படுத்த நிலையிலிருந்து நிமிர்ந்த நிலைக்கு அல்லது உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து நிற்கும் நிலைக்கு வருதல்.

  ‘அவர் இருக்கையிலிருந்து எழுந்து எங்களை வரவேற்றார்’
  உரு வழக்கு ‘இன்று வீழ்ச்சி அடைந்திருக்கும் நாம் என்றாவது ஒருநாள் விசையுடன் எழுவோம்’

 • 2

  (பறக்கக்கூடிய ஒன்று) இருக்கும் அல்லது நிலைகொண்டிருக்கும் பரப்பிலிருந்து உயர்தல்.

  ‘விமானம் கொஞ்சம்கொஞ்சமாக மேலே எழுந்தது’
  ‘பறவைகள் மரங்களிலிருந்து கூட்டமாக எழுந்து பறந்த காட்சி அற்புதமாக இருந்தது’

 • 3

  (தூக்கம் நீங்கிப் படுக்கையை விட்டு) அகலுதல்.

  ‘காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்தார்’
  ‘படுக்கையை விட்டு எழும்போதே அன்று செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்தன’
  ‘மத்தியானம் தூங்கி எழுந்ததும் அவர் காப்பி சாப்பிடுவார்’

 • 4

  (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) (ஒன்றைச் செய்ய) இயலுதல்.

  ‘சொல்ல நினைக்கிறேன், ஆனால் நா எழவில்லை’
  ‘புத்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை’

 • 5

  (குறிப்பிட்ட எண்ணம், உணர்வு போன்றவை) தோன்றுதல்.

  ‘அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கடைசி வரை எழவே இல்லை’
  ‘தன் பெண்ணின் திருமணத்தை எப்படி நடத்தி முடிக்கப்போகிறோமோ என்ற கவலை அவர் மனத்தில் எழுந்தது’
  ‘இவ்வளவு பணம் அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்ற சந்தேகம் எங்கள் எல்லாருக்கும் எழுந்தது’
  ‘உன் நினைவு எழும்போதெல்லாம் நான் உன் புகைப்படத்தைப் பார்த்துக்கொள்கிறேன்’

 • 6

  (குறிப்பிட்ட நிலை அல்லது பிரச்சினை, மோதல், குற்றச்சாட்டு போன்றவை) உருவாதல்.

  ‘நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு இப்போது தமிழில் அவசியம் எழுந்துள்ளது’
  ‘நம் இருவரிடையே எழுந்துள்ள பிரச்சினையை நாம்தான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்’
  ‘அமைச்சரின் பேரில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது’
  ‘விமர்சனம் எழும்போது அதைச் சந்திக்கத் தேவையான பக்குவம் உன்னிடம் இல்லை’

 • 7

  (ஒலி, கோஷம் போன்றவை) உண்டாதல்.

  ‘அவர் பேசும்போது கூட்டத்திலிருந்து சத்தம் எழவே இல்லை’
  ‘‘முதலாளி ஒழிக’ என்று கோஷம் எழுந்தது’

 • 8

  (படைப்பு, கருத்துகள் முதலியன) தோன்றுதல்.

  ‘சங்கப் பாடல்களைப் படிக்கும் போது அவை எந்தக் காலகட்டத்தில் எழுந்தவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’
  ‘சிவனைப் போற்றி எழுந்த பாடல்கள்’
  ‘இந்தப் பத்திரிகை எந்தச் சூழலில் எழுந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது’

 • 9

  (குறிப்பிடப்படும் ஒன்று) வெளிப்படுதல்; மேல்வருதல்.

  ‘தண்ணீர் ஊற்றி அணைத்தபின் அடுப்பிலிருந்து புகை எழுந்தது’
  ‘ஆள் உயரத்திற்கு எழுந்த அலைகள்’
  ‘அவரிடமிருந்து ஏதோ ஒரு வீச்சம் எழுந்தது’
  உரு வழக்கு ‘அவர் கண்களில் ஜுவாலை எழுந்தது’

 • 10

  (கட்டடம், கோயில் போன்றவை) கட்டப்படுதல்.

  ‘இங்கே ஒரு அடுக்குமாடிக் கட்டடம் எழவிருக்கிறது’

எழு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழு1எழு2

எழு2

துணை வினைஎழ, எழுந்து

 • 1

  முதன்மை வினை தெரிவிக்கும் உணர்ச்சி மிகுந்த வேகத்துடன் வெளிப்படுவது என்பதைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு துணை வினை.

  ‘கொடுமையைப் பொறுக்க முடியாமல் கொதித்தெழுந்தான்’
  ‘மக்கள் கிளர்ந்தெழுந்தனர்’