எழுது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழுது1எழுது2

எழுது1

வினைச்சொல்எழுத, எழுதி

 • 1

  (பேனா, பென்சில் முதலியவற்றைப் பயன்படுத்தி) மொழியின் குறியீடுகளை ஒரு பரப்பில் பதித்தல் அல்லது குறித்தல்.

  ‘குழந்தை ‘அ’ எழுதியிருப்பதைப் பார்!’
  ‘இந்தக் கல்வெட்டு தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருக்கிறது’
  ‘அந்தக் காலத்தில் விரலால் மணலில் எழுதிப் பயிற்சி செய்வார்கள்’

 • 2

  (தகவல், கடிதம் முதலியவற்றை) வரிவடிவத்தில் தருதல்.

  ‘நாளை ஒரு கடிதம் எழுத வேண்டும்’
  ‘கோப்பில் உன்னைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறார்’
  ‘தனது குறையை எழுதிப் புகார்ப் பெட்டியில் போட்டான்’

 • 3

  (கதை, கட்டுரை, பாடல் முதலியன) இயற்றுதல்.

  ‘பின்நவீனத்துவத்தைப் பற்றி அவர் எழுதியிருக்கும் கட்டுரை இது’
  ‘நான் அடுத்ததாக ஒரு பேய்க்கதை எழுதப்போகிறேன்’
  ‘இது யார் எழுதிய நாடகம்?’

 • 4

  வரைதல்.

  ‘சிறுவன் அட்டையில் கிரீடம் எழுதித் தலையில் அணிந்துகொண்டான்’
  ‘இந்த ஓவியத்தில் இன்னும் கண் மட்டும்தான் எழுத வேண்டும்’
  ‘இராவணன் வேடம் ஏற்பவர் முகம் எழுதிக்கொண்டிருந்தார்’

 • 5

  (வர்ணம், மை முதலியன) தீட்டுதல்.

  ‘மை எழுதிய கண்’

 • 6

  (வரவு, செலவு முதலியவற்றை) குறித்தல்.

  ‘செலவுகளை யார் கணக்கில் எழுதுவது?’

 • 7

  (உயில், ஒப்பந்தம் போன்றவற்றை) ஏற்படுத்துதல்.

  ‘அவர் எழுதியுள்ள உயிலின்படி இந்தச் சொத்துகள் எல்லாம் ஒரு அனாதை ஆசிரமத்திற்குப் போய்விட்டன’
  ‘வீட்டை உனக்கு விற்கிறேன் என்று எழுதியா தந்திருக்கிறேன்?’

 • 8

  கடவுள் ஒருவருடைய விதியை அல்லது தலையெழுத்தை முடிவு செய்வதாக நம்புவதைக் குறிக்கும் சொல்.

  ‘எல்லாம் அவன் எழுதியபடிதான் நடக்கும் என்ற நம்பிக்கை’
  ‘‘கடவுள் எனக்கு என்ன எழுதியிருக்கிறாரோ தெரியவில்லை’ என்றான்’

 • 9

  (தேர்வில்) பங்குகொள்ளுதல்/(தேர்வில் கேள்விக்கு) எழுத்து வடிவில் பதில் தருதல்.

 • 10

  (கணிப்பொறியில்) குறிப்பிட்ட கட்டளைநிரலுக்கான ஆணைகளை வரிசைப்படுத்தி உருவாக்குதல்.

  ‘அலுவலகக் கணக்குவழக்குகளை நிர்வகிக்கப் புதிதாக ஒரு கட்டளைநிரல் எழுதிக்கொண்டிருக்கிறார்’

எழுது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழுது1எழுது2

எழுது2

வினைச்சொல்எழுத, எழுதி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (திருமணத்தை) பதிவுசெய்தல்.

  ‘அவன் தாய் தகப்பனுக்குத் தெரியாமல் திருமணத்தை எழுதிவிட்டானாம்’