தமிழ் ஏற்று யின் அர்த்தம்

ஏற்று

வினைச்சொல்ஏற்ற, ஏற்றி

 • 1

  (ஒன்றினுள் அல்லது ஓர் இடத்தின் மேல் வந்திருக்கும்படி செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (வாகனத்தில்) ஏறச்செய்தல்

   ‘பேருந்தில் அதிகப் பயணிகளை ஏற்றுவது தவறு’
   ‘அம்மாவை வண்டியில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன்’

  2. 1.2 (ஒன்றின் மேல்) தூக்கிவைத்தல்; (ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு இடத்திற்கு மேலே போகச் செய்தல்

   ‘எல்லாச் சாமான்களையும் வண்டியில் ஏற்றிவிட்டீர்களா?’
   ‘பால் பாத்திரத்தை இப்பொழுதுதான் அடுப்பில் ஏற்றினேன்’
   ‘அவனைக் குதிரைமேல் ஏற்றி உட்கார வைத்தேன்’
   உரு வழக்கு ‘கலை உலகில் என்னை ஏற்றிவைத்த பெருமை என் அன்னையைச் சாரும்’

 • 2

  (ஒன்றின் மீது போகச்செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கீழே கிடப்பதன் மேல் ஒன்றை) செலுத்துதல்

   ‘தெருவில் விளையாடும் குழந்தைகள்மேல் ஏற்றிவிடாமல் பார்த்து லாரியை ஓட்டு’

 • 3

  (மேல்நோக்கிப் போகச்செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (கம்பத்தில் கொடியை) உயர்த்துதல்

   ‘தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் ஒலித்தது’
   ‘காலையில் ஏற்றிய கொடியை மாலையில்தான் இறக்குவார்கள்’

  2. 3.2 (நீரை) மேலே போகச் செய்தல்

   ‘நீரேற்று நிலையம்’

  3. 3.3 (கீழ்நோக்கி வருவதை அல்லது ஒரு நிலையிலிருப்பதை) உயர்த்துதல்

   ‘மூக்கில் இறங்கியிருந்த கண்ணாடியை விரல்களால் ஏற்றிவிட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்’
   ‘கையில் சரிந்த துண்டைத் தோளில் ஏற்றிப் போட்டுக்கொண்டார்’
   ‘படத்தை இன்னும் சிறிது ஏற்றி மாட்டு!’

  4. 3.4 (விலை, அளவு, தன்மை முதலியவற்றை) உயர்த்துதல்; அதிகப்படுத்துதல்

   ‘வீட்டுக்காரர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாடகையை ஏற்றிவிடுகிறார்’

  5. 3.5 (குரலை) உயர்த்துதல்

   ‘குரலைப் படிப்படியாக எப்படி ஏற்றி இறக்கலாம் என்ற பயிற்சி நடிகர்களுக்கு அளிக்கப்படுகிறது’

  6. 3.6உயர் வழக்கு உயர்வாகக் கூறுதல்

   ‘இறைவனது திருவிளையாடல்கள் ஏற்றிப் போற்றப்படுகின்றன’

 • 4

  (உள்ளே செல்வதை மேல் நோக்கிச் செல்வதாகக் கூறும் வழக்கு)

  1. 4.1 (உடம்பில்) உட்செலுத்துதல்

   ‘விபத்தில் கால் இழந்தவருக்கு உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டும்’

  2. 4.2 (ஒரு தன்மை, விசை போன்றவற்றை ஒன்றுக்கு) ஊட்டுதல்

   ‘உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களுக்கு வெறி ஏற்றிவிடுகிறார்கள்’
   ‘கவிஞர்கள் சொற்களுக்கு ஒளியையும் அழகையும் அல்லவா ஏற்றிவிடுகிறார்கள்!’
   ‘கட்டியங்காரன் நிகழ்காலத்தின் சாயலைத் தெருக்கூத்தில் ஏற்றிவிடுகிறான்’
   ‘காந்தவிசை ஏற்றப்பட்ட ஊசி’

  3. 4.3 (சூட்டை) பரவச்செய்தல்

   ‘பாத்திரத்தை லேசாகச் சூடேற்றியபின் எண்ணெய் ஊற்றவும்’

 • 5

  (ஒன்றின் மீது மாற்றுதல் தொடர்பான வழக்கு)

  1. 5.1 (பழி, பாவம் போன்றவற்றை ஒருவர்மேல்) சுமத்துதல்

   ‘பிறர் மேல் பழியை ஏற்றிவிடுவது சுலபம்’

  2. 5.2 (குறிப்பில்) சேர்த்தல்

   ‘அந்த உறுப்பினர் கூறிய சில சொற்கள் அவைக்குறிப்பில் ஏற்றப்படாது’

  3. 5.3 (அரியணையில், ஆட்சியில்) அமர்த்துதல்

   ‘தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை ஆட்சியில் ஏற்றிவிட்டுக் கட்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் தலைவர்’
   ‘தன் மகனை அரியணையில் ஏற்றிவிட்டுத் துறவறம் பூண்ட மன்னர்’

தமிழ் ஏற்று யின் அர்த்தம்

ஏற்று

வினைச்சொல்ஏற்ற, ஏற்றி

 • 1

  (விளக்கு, கற்பூரம் போன்றவற்றை) எரியச்செய்தல்; கொளுத்துதல்.

  ‘மணி ஆறு ஆகப்போகிறது; இன்னும் விளக்கு ஏற்றாமல் என்ன செய்கிறாய்?’

 • 2

  (மின் விளக்கை எரியச் செய்ய விசையை) போடுதல்.

  ‘மின் விளக்கை ஏற்றியவுடன் அறையில் ஒளி பாய்ந்தது’