தமிழ் ஏல் யின் அர்த்தம்

ஏல்

வினைச்சொல்ஏற்க, ஏற்று

 • 1

  ஒப்புக்கொள்ளுதல்; அங்கீகரித்தல்.

  ‘நீண்ட விவாதத்துக்குப் பிறகு திருத்தப்பட்ட அறிக்கையை மாநாடு ஏற்றது’
  ‘இது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி’
  ‘கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிறகு மக்களின் வாழ்த்துகளைப் பிரதமர் ஏற்றார்’
  ‘அவரைச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக ஏற்கத் தடை இல்லை’

 • 2

  (பொறுப்பு, பதவி முதலியவற்றை அல்லது தண்டனையை) ஒப்புக்கொள்ளுதல்.

  ‘இன்று புதிய முதல்வர் பதவி ஏற்கிறார்’
  ‘கிடைக்கும் வேலையை ஏற்பது என்று அவள் தீர்மானித்துக்கொண்டாள்’
  ‘நீங்கள் தரும் தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன்’

 • 3

  (நாடகத்தில், திரைப்படத்தில் குறிப்பிட்ட பாத்திரத்தை) மேற்கொள்ளுதல்.

  ‘அவர் பல முறை முருகன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்’
  ‘இராவணன் பாத்திரத்தை அவர் ஏற்க மறுத்தார்’

 • 4

  (விண்ணப்பம் முதலியவற்றை) பெறுதல்.

  ‘பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏற்கும் கடைசித் தேதியும் முடிந்து விட்டது’

 • 5

  உறிஞ்சி உட்கொள்ளுதல்; கிரகித்தல்.

  ‘புதிய ரக நெல் சுமாராக உரம் ஏற்றுச் செழித்து வளரும் இயல்பு உடையது’
  ‘இந்தத் துணி சாயம் ஏற்காது’

 • 6

  இலக்கணம்
  (ஒரு சொல் இன்னொரு சொல்லை) சேர்த்துக்கொள்ளுதல்.

  ‘இரண்டாம் வேற்றுமை ஏற்ற பெயர்ச்சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்’
  ‘‘ஓடுதல்’ என்ற சொல் ‘-தல்’ விகுதி ஏற்ற தொழிற்பெயர் ஆகும்’
  ‘வினைச்சொல் வினையடை ஏற்கும்’