தமிழ் சேர் யின் அர்த்தம்

சேர்

வினைச்சொல்சேர, சேர்ந்து, சேர்க்க, சேர்த்து

 • 1

  (இணைதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 கூட்டாக இணைதல்

   ‘இந்த ஆங்கில நாவலை இரண்டு பேர் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கின்றனர்’
   ‘கொஞ்சம் பொறு, நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து போவோம்’
   ‘நான்கும் இரண்டும் சேர்ந்தால் ஆறு’

  2. 1.2 (ஒன்றை அல்லது ஒருவரை மையமாகக் கொண்டு நபர்கள்) ஒன்றாதல்; ஒருங்கிணைதல்; திரளுதல்

   ‘அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டத்தை முன்னிட்டு ஒன்றாகச் சேர்ந்தன’
   ‘அவர் போகும் இடங்களிலெல்லாம் நிறைய கூட்டம் சேர்கிறது’

  3. 1.3 ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளுதல்; நட்பு கொள்ளுதல்

   ‘அவனோடு சேராதே. ரொம்ப மோசமானவன்’
   ‘உங்களுடன் சேர்ந்ததால்தான் நானும் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்’

  4. 1.4 (சாலை, ஆறு முதலியன) சந்தித்தல்; இணைதல்

   ‘தெருவும் சந்தும் சேரும் இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது’

  5. 1.5 (உடைந்த எலும்பு) ஒட்டிப் பொருந்துதல்

   ‘முறிந்த கையெலும்பு சேர்வதற்கு நான்கு மாதங்கள் ஆகலாம்’

  6. 1.6 (ஒரு அமைப்பு, நிறுவனம், குழு முதலியவற்றில்) இடம்பெறுதல்; (வேலையில்) பொறுப்பேற்றுக்கொள்ளுதல்

   ‘பொறியியல் கல்லூரியில் சேர விரும்புகிறேன்’
   ‘அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்’
   ‘அவர் வேலையில் சேர்ந்து கொஞ்ச நாளிலேயே பதவி உயர்வு பெற்றுவிட்டார்’

 • 2

  (அடைதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பணம்) சேமிக்கப்படுதல்

   ‘இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்டால் புது வீடு கட்ட ஆரம்பித்துவிடுவேன்’

  2. 2.2 (ஓர் இடத்தை) அடைதல்

   ‘சீக்கிரம் புறப்பட்டால்தான் இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேர முடியும்’
   ‘நீ அனுப்பிய கடிதம் போய்ச் சேர்ந்ததா என்று தெரியவில்லை’

  3. 2.3 (ஒன்று ஒருவரிடம்) சென்றடைதல் அல்லது வந்தடைதல்

   ‘நான் அனுப்பிய பணம் வந்து சேர்ந்த உடனேயே எனக்குத் தகவல் தெரிவிக்கவும்’

  4. 2.4 (சொத்து ஒருவருக்கு) உரிமையாதல்

   ‘உயிலின்படி அவருடைய சொத்துகள் அனைத்தும் இந்தப் பள்ளிக்குச் சேரும்’

 • 3

  (பொருந்துதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 பொருத்தமாக அமைதல்

   ‘இந்தச் சாவி வீட்டில் உள்ள எல்லாப் பூட்டுக்கும் சேரும்’
   ‘இந்தச் சட்டை யாருக்கும் சேராது போலிருக்கிறதே!’

 • 4

  (ஓர் இடத்தில் திரண்டிருத்தல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (செல்வம்) குவிதல்

   ‘அவனுக்குப் பல்வேறு வழிகளில் பணம் சேர்கிறது’

  2. 4.2 (அழுக்கு அல்லது துணி முதலியன) நிறைதல்

   ‘நக இடுக்கில் அழுக்கு சேர்ந்திருக்கிறது’
   ‘துணி நிறையச் சேர்ந்துவிட்டது; துவைப்பதற்கு நேரம் இல்லை’

தமிழ் சேர் யின் அர்த்தம்

சேர்

வினைச்சொல்சேர, சேர்ந்து, சேர்க்க, சேர்த்து

 • 1

  (ஒன்று கூடுமாறு செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (நபர்களை) திரட்டுதல்; ஒருங்கிணைத்தல்

   ‘திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் சேர்த்து ஓர் அமைப்பு உருவாக்கப்படுகிறது’
   ‘என்னை அடிப்பதற்கு அவன் ஆள் சேர்க்கிறானாமே?’
   ‘மாநாட்டுக்கு நிறைய கூட்டம் சேர்க்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அவரை நெருக்கியது’

  2. 1.2 (பொருள்களை) சேகரித்தல்

   ‘தபால் தலைகள் சேர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்’
   ‘இவை அவர் சேர்த்திருக்கும் பழைய நாணயங்கள்’

  3. 1.3 (பணம்) சம்பாதித்தல்; ஈட்டுதல்

   ‘அவன் வெளிநாட்டுக்குப் போய்ச் சேர்த்த பணத்தையெல்லாம் வீடாக வாங்கிக் குவிக்கிறான்’
   ‘வீணாக ஊர்சுற்றுவதை விட்டுவிட்டு ஒரு வேலையில் சேர்ந்து நாலு காசு சேர்க்கிற வழியைப் பார்’

  4. 1.4 (பணத்தை) சேமித்தல்

   ‘சம்பாதித்த காசையெல்லாம் சேர்த்துவைக்காமல் செலவு செய்துவிட்டு இப்போது சோற்றுக்கே திண்டாடுகிறார்’
   ‘பெண்ணின் மேல்படிப்புக்காகப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்’

 • 2

  (அடையச் செய்தல் அல்லது இடம்பெறச்செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஓர் இடத்தை) சேரச் செய்தல்

   ‘பாட்டியை எப்படித்தான் ஊர் கொண்டுபோய்ச் சேர்க்கப்போகிறேனோ!’
   ‘இந்தக் கடிதத்தை அவரிடம் சேர்த்து விடு’
   ‘புத்தகத்தை அவரிடம் நான் சேர்ப்பதற்குள் நான்கு முறை கேட்டுவிட்டார்’

  2. 2.2 (ஒன்றை ஒருவரிடம்) ஒப்படைத்தல்

   ‘கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டாயா?’
   ‘நீங்கள் கொடுத்த பணத்தைப் பத்திரமாக உங்கள் வீட்டில் சேர்த்துவிட்டேன்’

  3. 2.3 (அமைப்பு, நிறுவனம், குழு முதலியவற்றில் ஒருவரை) இடம்பெறச் செய்தல்

   ‘குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நன்கொடை தர வேண்டியிருக்கிறது’
   ‘நேற்றுதான் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்’
   ‘அந்தப் பஞ்சாலையில் புதிதாக ஆட்களைச் சேர்க்கிறார்கள்’
   ‘தம்பியையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்’

 • 3

  (இணையச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (புத்தகம், விவரங்கள், வரிசை முதலியவற்றில் ஒன்றை) உள்ளடக்குதல்; இணைத்தல்

   ‘இந்த அகராதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன’
   ‘இரண்டாம் பதிப்பில் இந்தச் சிறுகதை சேர்த்துக்கொள்ளப்படவில்லை’
   ‘நான் சொன்ன கணக்கில் என் போக்குவரத்துச் செலவுகளைச் சேர்க்கவில்லை’
   ‘பெண்ணிய எழுத்தாளர்கள் வரிசையில் இவரையும் சேர்க்கலாம்’

  2. 3.2 (ஒன்றை ஒன்றில்) கலத்தல்

   ‘காப்பியில் கொஞ்சம் பாலைச் சேர்க்கட்டுமா?’
   ‘பசை கட்டியாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்’
   ‘அவர் இந்தப் படத்தில் இந்தியப் பாரம்பரிய இசையுடன் மேற்கத்திய இசையையும் சேர்த்துப் புதுமையாக இசையமைத்திருந்தார்’

  3. 3.3 (குறிப்பிட்ட ஒரு தன்மையை அல்லது நிலையை ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) அளித்தல்

   ‘தொன்மக் குறியீடுகள் இந்தக் கவிதைக்குப் புதிய பரிணாமத்தைச் சேர்க்கின்றன’
   ‘இந்தப் புதிய பூங்கா சென்னை மாநகரத்திற்கு எழில் சேர்க்கிறது’

  4. 3.4 (ஒன்றுக்கொன்று) தொடர்புகொள்ளும்படி ஒன்றாக்குதல்; இணைத்தல்

   ‘கொடுத்திருக்கும் எண் வரிசையில் புள்ளிகளைச் சேர்த்தால் ஒரு விலங்கின் படம் கிடைக்கும்’
   ‘கையோடு கை சேர்த்துக்கொண்டு இருவரும் நடந்தார்கள்’
   ‘என்னை அவனுடன் சேர்த்துப் பேசாதீர்கள்’
   ‘இது இரண்டு ரகங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட வீரிய ரக நெல் ஆகும்’
   ‘குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்’

  5. 3.5 (ஒரு எண்ணை மற்றொரு எண்ணுடன்) கூட்டுதல்

   ‘நான்குடன் இரண்டைச் சேர்த்தால் ஆறு கிடைக்கும்’

  6. 3.6 (கிரிக்கெட்டில் ஒரு வீரர் அல்லது அணி ஓட்டத்தை) பெறுதல்

   ‘தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே 175 ஓட்டங்கள் சேர்த்தனர்’