தமிழ் தாங்கு யின் அர்த்தம்

தாங்கு

வினைச்சொல்தாங்க, தாங்கி

 • 1

  (உடலில் வலி, மனத்தில் துன்பம் முதலியவற்றை) பொறுத்தல்; (ஒரு நிகழ்ச்சி விளைவிக்கும் பாதிப்பை) ஏற்றல்.

  ‘தலைவலியையாவது தாங்கிக்கொள்ளலாம். வயிற்றுவலியைத் தாங்க முடியாது’
  ‘இந்தப் பகுதியில் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில்) (அதிர்ச்சி தரும் அல்லது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியை) ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அல்லது மன உறுதியைப் பெற்றிருத்தல்.

  ‘இந்த அதிர்ச்சியான செய்தியைத் திடீரென்று சொன்னால் அவன் தாங்க மாட்டான்’
  ‘இந்தச் சந்தோஷத்தை அவளால் தாங்க முடியுமா?’

 • 3

  (பாரம், கனம்) சுமக்க முடிதல்.

  ‘இந்த வண்டி அதிக பாரம் தாங்காது’
  உரு வழக்கு ‘கணவனும் மனைவியும்தான் குடும்ப பாரத்தைத் தாங்க வேண்டும்’

 • 4

  (விழ இருக்கும் நபரை) கைகளை விரித்துத் தடுத்து நிறுத்துதல்/(கனமான பொருளை) கையில் ஏந்துதல்.

  ‘நான் பக்கத்தில் நின்றிருந்ததால் கீழே விழ இருந்தவரைத் தாங்கிக்கொள்ள முடிந்தது’
  ‘அவன் தூக்கிப் போட்ட புத்தகத்தைத் தாங்கிப் பிடித்தேன்’

 • 5

  வட்டார வழக்கு (கையை) ஊன்றுதல்.

  ‘கையைத் தாங்கித் தரையிலிருந்து எழுந்தான்’

 • 6

  (தாங்கி, தாங்கிய ஆகிய இரு எச்ச வடிவங்கள் மட்டும்) (பத்திரிகை முதலியவை குறிப்பிட்ட செய்தி, படம் முதலியவற்றை) கொண்டிருத்தல்.

  ‘கொலை, கொள்ளைச் செய்திகளைத் தாங்கி வராத பத்திரிகைகளே இல்லை’
  ‘திரைப்பட நடிகையின் படத்தைத் தாங்கிய முகப்பு அட்டை’

 • 7

  (புறக்கணிக்கக் கூடிய நிலையிலும் பொறுத்துக்கொண்டு) நயமாக வேண்டுதல்; கெஞ்சுதல்.

  ‘அவன் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தால் இருக்கட்டும். நீ அவனைத் தாங்க வேண்டாம்’

 • 8

  (தாங்கும், தாங்காது ஆகிய இரு முற்று வடிவங்கள் மட்டும்) (செலவு, நஷ்டம் முதலியவை ஒருவருக்கு) கட்டுப்படியாதல்.

  ‘வியாபாரத்தில் லட்ச ரூபாய் நஷ்டம் வந்தாலும் அவருக்குத் தாங்கும்; நமக்குத் தாங்காது’

 • 9

  பிழைத்திருத்தல்.

  ‘அடுத்த அமாவாசைவரை இவர் தாங்குவாரா?’

 • 10

  (எதிர்மறை வடிவங்கள் மட்டும்) (சிரிப்பு, அழுகை முதலியவற்றை) அடக்க இயலுதல்; முடிதல்.

  ‘அவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை’
  ‘துக்கம் தாங்காமல் அழுதுவிட்டான்’