தமிழ் தேடு யின் அர்த்தம்

தேடு

வினைச்சொல்தேட, தேடி

 • 1

  (தனக்கு முன்னே இல்லாத ஒருவரை அல்லது தேவைப்படுகிற ஒன்றை முயற்சி செய்து) கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  ‘குழந்தை அம்மாவைத் தேடி அழுதது’
  ‘குற்றவாளியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்’
  ‘பல நாட்களாகத் தேடியும் வீடு ஒன்றும் வசதியாக அமையவில்லை’
  ‘நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த கட்டுரை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது’
  உரு வழக்கு ‘தன் கேள்விக்கான பதிலை அவர் முகத்தில் தேடினாள்’

 • 2

  (தேவைப்படுகிற அல்லது நாடுகிற ஒன்றை) பெற முயலுதல்.

  ‘தங்கள் இயக்கத்திற்குப் பொதுமக்களிடம் அவர்கள் ஆதரவு தேடினர்’
  ‘ஆதாயம் தேடாமல் அவன் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான்’
  ‘வரும் தேர்தலைக் குறிவைத்துத் தனக்குச் செல்வாக்கு தேடும் முயற்சியில் அவர் இறங்கினார்’

 • 3

  (காண, அடைய) விரும்புதல்; நாடுதல்.

  ‘அன்றாட வாழ்க்கையில் அலுப்பு ஏற்படும்போது சுற்றுலா, விளையாட்டு, கேளிக்கை என்று மாற்றம் தேடுகிறோம்’
  ‘உழைத்து முன்னேற விரும்பாமல் குறுக்கு வழியைத் தேடாதே’
  ‘தன்னை வழிநடத்தவல்ல குருவைத் தேடி அலைந்தார்’

 • 4

  (தனக்கு இழுக்கு, களங்கம்) வந்துசேருமாறு செய்தல்.

  ‘நன்றாகப் படித்திருந்தும் இப்படி ஒரு கெட்ட பெயரைத் தேடிக்கொண்டாயே’

 • 5

  ஏற்படுத்துதல்.

  ‘தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் தேடும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்’

 • 6

  (பணம்) சம்பாதித்தல்; ஈட்டுதல்.

  ‘பொருள் தேடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது’
  ‘தேடிய சொத்தையெல்லாம் யாருக்கோ எழுதிவைத்துவிட்டு அவர் இறந்துபோனார்’
  ‘செல்வம் தேடுவது தவறு என்கிறீர்களா?’

 • 7

  (புண்ணியம், பாவம் போன்றவற்றை) சேர்த்தல்/(செய்த பாவம் போன்றவற்றை) ஈடுகட்டும் விதமாக ஒரு நற்செயலைச் செய்தல்.

  ‘போகிற வழிக்குப் புண்ணியம் தேடுகிறாயா?’
  ‘செய்த கொடுமைக்கு எப்படிக் கழுவாய் தேடுவது?’
  ‘நான் அந்தக் குடும்பத்திற்குச் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடப்பார்க்கிறேன்’