தமிழ் தேய் யின் அர்த்தம்

தேய்

வினைச்சொல்தேய, தேய்ந்து, தேய்க்க, தேய்த்து

 • 1

  (ஒரு பொருள் மற்றொன்றின் மீது) உரசுதல்; உராய்தல்.

  ‘இயந்திரத்தின் பட்டை எங்கோ தேய்வதால்தான் இந்தச் சத்தம் வருகிறது’

 • 2

  (ஒரு பொருள் மற்றொரு பொருளோடு) உராய்வதால் வடிவம், பருமன் முதலியவை குறைதல்.

  ‘செருப்புத் தேய்ந்துவிட்டது’
  ‘இயந்திரத்தில் தேய்ந்துபோன பல் சக்கரங்கள்’

 • 3

  (உடல்) மெலிதல்.

  ‘ஏன் இப்படி நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகிறாய்?’

 • 4

  (ஒலி) அளவில் குறைதல்.

  ‘ரயிலின் சத்தம் தேய்ந்து மறையும்வரை நின்றிருந்தான்’

தமிழ் தேய் யின் அர்த்தம்

தேய்

வினைச்சொல்தேய, தேய்ந்து, தேய்க்க, தேய்த்து

 • 1

  (ஒன்றை மற்றொன்றின் மீது) அழுத்தி முன்னும்பின்னுமாக இழுத்தல்; உரசுதல்.

  ‘உப்புத்தாளைத் தேய்த்து வர்ணத்தை நீக்கினான்’
  ‘ஏன் செருப்பைத் தேய்த்துத்தேய்த்து நடக்கிறாய்?’

 • 2

  (தலையில், உடலில் எண்ணெய் முதலியவற்றை வைத்து) அழுத்திப் பூசுதல்.

  ‘தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவில்லையா?’
  ‘தலை வலிக்கிறது என்று நெற்றியில் தைலத்தைத் தேய்த்துக்கொண்டார்’

 • 3

  பேச்சு வழக்கு (பல்) துலக்குதல்.

  ‘பல் தேய்த்துவிட்டுக் காப்பி குடி’

 • 4

  (பாத்திரங்களை) சுத்தப்படுத்துதல்; விளக்குதல்.

  ‘சமையல் பாத்திரங்களைத் தேய்த்துவிட்டு வேலைக்காரி போய்விட்டாள்’

 • 5

  இஸ்திரிப் பெட்டியைத் துணியின் மேலே வைத்து (துணியில் உள்ள சுருக்கங்கள் நீங்குகிற வகையில்) அழுத்தி இழுத்தல்.

  ‘சட்டையைத் தேய்க்கக் கொடு!’
  ‘புடவையை நான் தேய்த்துத் தருகிறேன்’

 • 6

  சற்றுக் கெட்டியாகக் கரைத்த கடலைமாவைச் சாரணியில் வைத்து அழுத்தி இழைகளாகப் பிழிதல்.

  ‘காராபூந்தி தேய்க்க ஆள் வரச் சொல்லியிருக்கிறேன்’

 • 7

  கடையில் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் முறையாகக் கடன் அட்டையை அதற்குரிய மின்னணுச் சாதனத்தில் வைத்து மேலிருந்து கீழாக இழுத்தல்.

  ‘கடைகளில் கடன் அட்டையை அதற்கு உரியவரின் முன்புதான் தேய்க்க வேண்டும்’