தமிழ் நட யின் அர்த்தம்

நட

வினைச்சொல்நடக்க, நடந்து

 • 1

  (இடம்பெயர்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 இயல்பான வேகத்தில் கால்களை மாற்றிமாற்றி முன்வைத்து இடம்பெயர்தல்

   ‘தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை இப்போதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது’
   ‘கையில் காசு இல்லாததால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு நடந்தே போனான்’
   ‘‘கூனாதே, நிமிர்ந்து நட’ என்று அப்பா கூறினார்’
   ‘காலில் விஷக்கடி பட்டவர் நடக்கக்கூடாது’
   உரு வழக்கு ‘எப்போதும் உன் குறிக்கோளை நோக்கியே நட’

  2. 1.2 (விண்வெளி வீரர் விண்கலத்துக்கு வெளியில் வந்து) மிதந்தபடி நகர்தல்

   ‘விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நிகழ்த்தினார்’

 • 2

  (நிகழ்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒரு சம்பவம் அல்லது நன்மை, தீமை போன்றவை) நிகழ்தல்; ஏற்படுதல்

   ‘இப்படி ஒரு விபத்து நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’
   ‘நடந்தது நடந்துவிட்டது; இனிமேல் வருந்திப் பயன் இல்லை’
   ‘ஆட்டத்தின் கடைசிப் பந்தில்தான் அந்த அற்புதம் நடந்தது’
   ‘நடந்ததைச் சொன்னால் அவள் நம்புவாளா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது’
   ‘யாராவது ஒருவருக்கு நல்லது நடந்தால் சரிதான்’
   ‘உலகில் வேறு எங்கும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பதில்லை’
   ‘சின்னச்சின்ன சண்டைகள் எல்லோருடைய வீட்டிலும் நடப்பதுதானே?’
   ‘சற்று நேரத்தில் பெரிய கலவரமே நடந்து முடிந்துவிட்டது’
   ‘அங்கு நடந்த அடிதடியில் இரண்டு குழுவினருக்குமே நல்ல காயம்’
   ‘இந்தப் பகுதியில் திருட்டுகள் அடிக்கடி நடக்கின்றன’
   ‘என் பையன்கள் இல்லாமல் எதுவும் நடக்காது’

  2. 2.2 (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு ஒன்று) நேர்தல்

   ‘இரண்டு பேரும் பேசிக்கொள்வதில்லையே. உங்களுக்கிடையே என்ன நடந்தது?’
   ‘என் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?’
   ‘கண்விழித்துப் பார்த்த பெரியவர் ‘எனக்கு என்ன நடந்தது?’ என்று சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்’
   ‘‘ஆண்டவா! யாருக்கும் தீங்கு நடக்காமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர் வேண்டிக்கொண்டார்’

  3. 2.3 (குடும்பம், ஆட்சி, அலுவலகம் முதலியவை) இயங்குதல்; செயல்படுதல்

   ‘மூத்த மகனின் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது’
   ‘மியான்மரில் வெகு காலமாக ராணுவ ஆட்சிதான் நடக்கிறது’
   ‘முதலாளி இருக்கும்வரை அலுவலகம் ஒழுங்காக நடக்கும்’
   ‘வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது தயவுசெய்து யாரும் உள்ளே வராதீர்கள்’
   ‘இந்தச் சிறிய வீட்டில்தான் எங்கள் குடித்தனம் நடக்கிறது’

  4. 2.4 (நாடகம் முதலியவை) நிகழ்த்தப்படுதல்/(திரைப்படம்) காட்டப்படுதல்

   ‘எங்கள் ஊரில் சர்க்கஸ் நடக்கிறது’
   ‘இந்தத் திரையரங்கில் என்ன படம் நடக்கிறது?’

  5. 2.5 (ஒரு நிகழ்ச்சி அல்லது வழக்கு, ஆராய்ச்சி, பேச்சுவார்த்தை முதலியவை) நடத்தப்படுதல்; நடைபெறுதல்

   ‘மகனின் கல்யாண வேலைகள் நல்லபடியாக நடக்க வேண்டும்’
   ‘இரு நாடுகளுக்கு இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன’
   ‘நந்தம்பாக்கத்தில் அச்சுக்கலைக் கண்காட்சி நடக்கிறது’
   ‘அப்பாவின் தகனம் நடந்துமுடிந்த பிறகுதான் அண்ணன் வந்துசேர்ந்தான்’
   ‘எங்கள் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின’
   ‘மருத்துவத் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன’
   ‘இந்தத் திரைப்படத்தைப் போன்ற கலை முயற்சிகள் பரவலாக நடக்க வேண்டும்’
   ‘சிறுவர்களுக்கான நீச்சல் போட்டி நடக்கிறது’
   ‘சட்டசபைத் தேர்தல் இந்த வருட இறுதியில் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது’
   ‘எங்கள் பள்ளியில் மாதாந்திரத் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது’

 • 3

  (நெறிமுறைகளின்படி செல்லுதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (குறிப்பிட்ட பண்பு, தன்மை போன்றவை வெளிப்படும் முறையில் அல்லது பண்பு, தன்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் முறையில் ஒருவர்) செயல்படுதல்

   ‘நான் சொல்வதைக் கேட்டு நடப்பதாக இருந்தால் இங்கு இரு’
   ‘அவன் இப்படி முரட்டுத்தனமாக நடந்துகொள்வான் என்று நான் நினைக்கவே இல்லை’
   ‘தனக்கு எல்லோரும் பணிந்து நடக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்’
   ‘அவர் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டார்’
   ‘என் முதலாளி என்னிடம் கனிவாக நடந்துகொள்கிறார்’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (குறிப்பிட்ட வயது) உடையதாக இருத்தல்

   ‘என் மகளுக்கு எட்டு முடிந்து ஒன்பது நடக்கிறது’
   ‘எனக்கு மூன்று வயது நடக்கும்போது கீழே விழுந்து அடிபட்டதால் ஏற்பட்ட தழும்பு’

  2. 4.2 எடுபடுதல்; பலித்தல்

   ‘உன்னுடைய வேலையெல்லாம் என்னிடம் நடக்காது!’
   ‘நானும் அவனை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்துபார்த்துவிட்டேன். ஆனால் அது நடக்கவில்லை’