தமிழ் நில் யின் அர்த்தம்

நில்

வினைச்சொல்நிற்க, நின்று

 • 1

  (இடம்பெயராமல் அல்லது மேற்கொண்டு தொடராமல் இருத்தல் குறித்த வழக்கு)

  1. 1.1 (மனிதன் அல்லது விலங்கு கால்களை ஊன்றித் தரையில்) உடம்பை நிமிர்ந்த நிலையில் வைத்திருத்தல்

   ‘எழுந்து நில்!’
   ‘எனக்குக் கால் வலிக்கிறது, நிற்க முடியவில்லை’
   ‘யானை நின்றுகொண்டே தூங்கும்’

  2. 1.2 (நிகழ்வது, இயங்குவது, செயல்படுவது போன்றவை) மேற்கொண்டு தொடராத நிலையை அடைதல்

   ‘வாசலில் மாட்டு வண்டி வந்து நின்றது’
   ‘பேருந்து நிற்காமல் போய்விட்டது’
   ‘என்னைக் கண்டதும் நின்றான்’
   ‘மழை இன்னும் நிற்கவில்லை’
   ‘பத்திரிகை வெளிவருவது நின்றுவிடக்கூடும்’
   ‘அவர் வேலையிலிருந்து நின்றுவிட்டார்’

 • 2

  (நிலையாக இருத்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (மரம், வீடு முதலியவை ஓர் இடத்தில்) அமைந்திருத்தல்

   ‘வீட்டின் முன் ஒரு மாமரம் நிற்கிறது’
   ‘இந்தத் தெருவிலேயே தனித்து நிற்கும் வீடு உங்களுடையதுதான்’

  2. 2.2பேச்சு வழக்கு (நீங்காமல்) நிலைத்தல்

   ‘துணியில் சாயம் நிற்கவில்லை’
   ‘அவன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்தான் கையில் காசு நிற்கிறது’

  3. 2.3 (கண்ணில், மனத்தில்) தங்குதல்

   ‘குழந்தை போன பிறகும் அதன் அழகிய உருவம் கண்ணில் நிற்கிறது’
   ‘மனத்தில் நிற்காத பேச்சு’

  4. 2.4 (கடன், பாக்கி) தரப்படாமல் இருத்தல்

   ‘வாங்கிய கடனில் இரண்டாயிரம் ரூபாய் பாக்கி நிற்கிறது’

  5. 2.5 (செய்த ஏற்பாட்டின்படி திருமணம், திருவிழா போன்றவை நடக்காமல்) இடையில் நிறுத்தப்படுதல்

   ‘உள்ளூர்ப் பிரச்சினையால் தேர்த் திருவிழா நின்றுபோனது’
   ‘வரதட்சிணை பிரச்சினையால் திருமணம் நின்றுவிடுமோ என்று பயமாக இருக்கிறது’

 • 3

  (ஒரு நிலையில் அமைதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (குறிப்பிடப்படும் நிலையில்) இருத்தல்

   ‘தலைமுடி தூக்கிக்கொண்டு நிற்கிறது’
   ‘இரண்டு போட்டிகளிலும் வென்று இந்திய அணி முன்னணியில் நிற்கிறது’
   ‘அம்மாவின் பிடிவாதம்தான் கல்யாணத்திற்குத் தடையாக நிற்கிறது’

  2. 3.2பேச்சு வழக்கு (பெரும்பாலும் ஏவல் வடிவத்தில்) காத்திருத்தல்

   ‘‘நில், நானும் வருகிறேன்.’’

  3. 3.3 (ஓர் இடத்தில் நீர் போன்றவை) தேங்குதல்

   ‘ஒரு நாள் பெய்த மழைக்கே தெருவில் தண்ணீர் நிற்கிறது’

  4. 3.4 (தேர்தலில்) போட்டியிடுதல்

   ‘உங்கள் கட்சி வேட்பாளராக நிற்பவர் யார்?’
   ‘நீங்கள் தேர்தலில் நிற்கப்போகிறீர்களா?’

  5. 3.5இலங்கைத் தமிழ் வழக்கு தங்குதல்

   ‘நான் சென்னையில் மேலும் ஒரு நாள் நிற்பேன்’
   ‘மாமா வீட்டில் ஒரு நாள் நின்றுவிட்டுப் புறப்படலாம்’

தமிழ் நில் யின் அர்த்தம்

நில்

துணை வினைநிற்க, நின்று

 • 1

  முதன்மை வினை குறிக்கும் செயல் தற்காலிகமானதாக இல்லாமல் நிலைத்து நீடிப்பதைக் குறிக்கப் பயன்படும் துணை வினை.

  ‘செய்தியைக் கேட்டு மலைத்துநின்றாள்’
  ‘அவர் மக்களின் ஆதரவை இழந்துநிற்கிறார்’