தமிழ் பதிவு யின் அர்த்தம்

பதிவு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம்; தடயம்.

  ‘உடம்பில் பல் பதிவுகள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது’
  ‘குற்றவாளிகளின் கைரேகைப் பதிவுகள்’
  உரு வழக்கு ‘மனப் பதிவுகள் கவிதை ஆகின்றன’

 • 2

  (சட்டப்படி) ஆவணத்தில் எழுதிவைக்கும் குறிப்பு.

  ‘திருமணப் பதிவு அலுவலகம்’
  ‘வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதாகப் பதிவாகியிருக்கும் வழக்குகள் பல’

 • 3

  (அகராதி தொடர்பாக வரும்போது) பொருள் காணப்பட வேண்டிய சொல், அதற்கான இலக்கணக் குறிப்பு, பொருள், எடுத்துக்காட்டு வாக்கியம் போன்ற தகவல்களின் தொகுப்பு.

  ‘இந்த அகராதியின் முதல் பதிப்பில் 15,875 பதிவுகள் தரப்பட்டுள்ளன’

 • 4

  (ஆவணம், கட்டுரை போன்றவற்றில் ஒன்று) குறிக்கப்பட்டுள்ள நிலை.

  ‘தென்னிந்தியாவில் 1890களில் நடந்த கலகங்களைப் பற்றிய பதிவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’

 • 5

  (அளவுகளைக் கருவியால்) கணக்கிடுதல்.

  ‘நேற்று நெல்லையில் பத்து செ.மீ. மழை பதிவாகியுள்ளது’

 • 6

  (பாடல், காட்சி முதலியவற்றைப் பதிவுநாடா, திரைப்படச் சுருள் முதலியவற்றில்) கேட்கும்படியாகவோ பார்க்கும்படியாகவோ கருவிகள் துணையால் அமைத்தல்.

  ‘பாடல் பதிவுடன் இன்று படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது’