தமிழ் பற யின் அர்த்தம்

பற

வினைச்சொல்பறக்க, பறந்து

 • 1

  வானவெளியில் செல்லுதல்.

  ‘ஒலியின் வேகத்தில் பறக்கும் விமானங்களும் உண்டு’
  ‘அடிபட்ட பறவை பறக்க முடியாமல் கீழே விழுந்தது’
  ‘வால் சரியாக இல்லாததால் பட்டம் பறக்கவில்லை’
  ‘கழுகு நிதானமாகப் பறந்துகொண்டிருந்தது’

 • 2

  விமானத்தில் பயணம் செய்தல்.

  ‘வியாபார விஷயமாக அவர் அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார்’

 • 3

  (கொடி, துணி, முடி போன்றவை காற்றில்) இங்குமங்குமாக அலைதல்.

  ‘வண்டியில் வேகமாகப் போய்க்கொண்டிருந்ததால் அவளது கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறந்தது’
  ‘தேசியக் கொடி படபடத்துப் பறந்துகொண்டிருந்தது’
  ‘காற்றில் துப்பட்டா பறக்க ஒரு பெண் வண்டி ஓட்டிக்கொண்டு சென்றாள்’

 • 4

  (வாகனம் அல்லது வாகனத்தில்) வேகமாகச் செல்லுதல்.

  ‘இரு திசைகளிலும் வாகனங்கள் பறந்துகொண்டிருந்ததால் சாலையைக் கடக்க வெகு நேரமாயிற்று’
  ‘செய்தியைச் சொல்லிவிட்டு வண்டியில் பறந்துவிட்டான்’

 • 5

  (தூசு, ஆவி போன்றவை) மேலே கிளம்பிக் காற்றில் அலைதல்.

  ‘புழுதி பறக்க வந்து நின்றது ஒரு வாகனம்’
  ‘சாணை பிடிக்கும்போது அரிவாளிலிருந்து பொறி பறந்தது’
  ‘ஆவி பறக்கும் காப்பி’

 • 6

  (பொருள்கள்) வீசப்படுதல்; எறியப்படுதல்.

  ‘கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டதும் நாற்காலிகளும் செருப்புகளும் பறந்தன’

 • 7

  பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்ய வேண்டும் என்றோ தனக்கு ஒன்று வேண்டும் என்றோ) மிகவும் அவசரப்படுதல் அல்லது துடித்தல்.

  ‘ரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும்போதே அவர் பறக்க ஆரம்பித்துவிட்டார்’
  ‘சாப்பாடு என்றால் பறக்கிறான்’

 • 8

  (கவலை, வலி, நோய் போன்றவை) விரைந்து நீங்குதல்.

  ‘காப்பி சாப்பிட்டதுமே தலைவலி பறந்துவிட்டது’
  ‘கொஞ்சம் நேரம் தியானம் செய், கவலை பறந்துவிடும்’