பிரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிரி1பிரி2பிரி3

பிரி1

வினைச்சொல்பிரிய, பிரிந்து, பிரிக்க, பிரித்து

 • 1

  (கட்டப்பட்டிருப்பது, ஒட்டப்பட்டிருப்பது விடுபடுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 ஒன்றாக இருக்கும், சேர்ந்திருக்கும் அல்லது ஒட்டியிருக்கும் நிலையிலிருந்து விடுபடுதல் அல்லது விலகுதல்

   ‘வண்டியிலிருந்து இறக்கும்போது கட்டு பிரிந்து புத்தகங்களெல்லாம் கீழே விழுந்தன’
   ‘சட்டையின் கைப்பகுதியில் தையல் பிரிந்திருப்பதால் நூல் தொங்குகிறது’
   ‘அஞ்சல் உறையின் வாய்ப் பகுதியைச் சரியாக ஒட்டாததால் பிரிந்துவிட்டது’
   ‘உயிரினங்களில் செல் பிரிவதன்மூலம் வளர்ச்சி நிகழ்கிறது’

 • 2

  (கலந்திருக்கும் நிலையிலிருந்து தனியாதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கசடு, மண்டி) தனித்து வருதல்

   ‘படிகாரத்தைப் போட்டால் நீரில் உள்ள கசடுகள் பிரிந்து பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்’

  2. 2.2

   காண்க: நீர் பிரி

 • 3

  (முழுமையாக இருப்பது பகுதிகளாதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (சொத்து, நிலம் போன்றவை) பகுக்கப்பட்டுத் தனித்தனிப் பங்காக ஆதல்

   ‘சொத்து பிரியக் கூடாது, சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது என்பது அம்மாவின் வாதம்’

  2. 3.2 ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்

   ‘சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது’
   ‘கிளைநதி பிரியும் இடம் இதுதான்’
   ‘தலைவரின் மறைவுக்குப் பின் கட்சி மூன்றாகப் பிரிந்துவிட்டது’
   ‘அந்த நிறுவனம் இரண்டாகப் பிரிந்ததிலிருந்து தொழில் படுத்துவிட்டது’
   ‘இந்த நாளங்கள் கல்லீரலில் சிறுசிறு தந்துகிகளாகப் பிரிகின்றன’

 • 4

  (ஒருவரை விட்டு அல்லது ஒன்றிலிருந்து விலகுதல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (ஒருவரோடு அல்லது பலரோடு) சேர்ந்திருக்கும் நிலையிலிருந்து அல்லது உறவுகொண்டிருக்கும் நிலையிலிருந்து விலகுதல்

   ‘நண்பர்களையெல்லாம் பிரிந்து வெளியூருக்குப் போய் வேலை பார்ப்பது சிரமமாக இருந்தது’
   ‘காவலர்கள் பிரிந்து சென்று அங்குமிங்குமாகத் தேடினர்’

  2. 4.2 (இருள்) விலகுதல்

   ‘இருள் பிரியாத காலை நேரம்’

  3. 4.3 (உயிர்) உடலை விட்டு நீங்குதல்

   ‘மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது’
   ‘எங்கள் தந்தை போன வருடம் இதே நாளில் எங்களை விட்டுப் பிரிந்தார்’

 • 5

  (மரபு வழக்கு)

  1. 5.1வட்டார வழக்கு (பணம்) வசூலாதல்

   ‘திருவிழாவுக்கு எவ்வளவு பணம் பிரிந்தது?’

பிரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிரி1பிரி2பிரி3

பிரி2

வினைச்சொல்பிரிய, பிரிந்து, பிரிக்க, பிரித்து

 • 1

  (கட்டப்பட்டிருப்பதை, ஒட்டியிருப்பதை அல்லது மடங்கியிருப்பதை விடுபடச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 ஒட்டியிருக்கும் அல்லது இணைந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடச் செய்தல்; மடங்கியிருக்கும் நிலையிலிருந்து விரியச் செய்தல்; அவிழ்த்தல்

   ‘கட்டைப் பிரித்துச் சேலைகளை எடுத்துக் காண்பித்தார்’
   ‘காயத்துக்குப் போட்ட கட்டை என்றைக்குப் பிரிக்கிறார்கள்?’
   ‘குடையைப் பிரிக்க முடியவில்லை’
   ‘திருடன் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கியிருக்கிறான்’
   ‘சால்வையைப் பிரித்துக் காட்டு’
   ‘இந்த உறையைப் பிரித்துப் பார்’

 • 2

  (கலந்திருக்கும், இணைந்திருக்கும் நிலையிலிருந்து தனியாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 பல கூறுகளால் அமைந்ததிலிருந்து கூறுகளைத் தனித்தனியே எடுத்தல்

   ‘கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்துவிட்டுச் சுத்திகரித்தால் அந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்தலாம்’
   ‘சொற்களைப் பிரித்துப் படிக்காதே!’

  2. 2.2 (புத்தகம் போன்றவற்றை) விரித்தல்

   ‘மேசையின் மேல் பிரித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தன’

 • 3

  (முழுமையாக இருப்பதைப் பகுதிகளாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (ஒரு பரப்பை அல்லது சொத்து போன்றவற்றை) பகுத்துத் தனித்தனிப் பிரிவுகளாக அல்லது பங்குகளாக ஆக்குதல்

   ‘ஒரு வட்டத்தை 360 பாகைகளாகப் பிரிக்கிறோம்’
   ‘பெரியவர் இருக்கிற சொத்தை எல்லாப் பையன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார்’

  2. 3.2 (பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை) தனித்தனியாக எடுத்தல் அல்லது கழற்றுதல்

   ‘இயந்திரத்தைப் பிரித்துப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்’
   ‘பழைய வாகனங்களிலிருந்து பிரித்து எடுத்த உதிரி பாகங்கள் இங்கே கிடைக்கும்’
   ‘பழைய கட்டடங்களிலிருந்து பிரிக்கப்பட்ட சாமான்கள் இங்கே குறைந்த விலைக்குக் கிடைக்கும்’

  3. 3.3 (குறிப்பிட்ட அடிப்படையில்) வேறுபடுத்துதல்; வகைப்படுத்துதல்

   ‘விண்ணப்பங்களைப் பிரித்து அடுக்குவதிலேயே பாதி நாள் போய்விடுகிறது’
   ‘உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம்’

  4. 3.4 (குடும்பம், கட்சி, குழு போன்றவற்றை) உடைத்தல்; பிளத்தல்

   ‘சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ஒற்றுமையாக இருந்த குடும்பத்தைப் பிரித்துவிட்டது’

 • 4

  (ஒருவரை அல்லது ஒன்றை விலக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (ஒருவரிடமிருந்து மற்றொருவரை) விலக்குதல்

   ‘தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது பெரிய பாவம் இல்லையா?’
   ‘திட்டமிட்டுச் சதிசெய்து காதலர்களைப் பிரித்துவிட்டனர்’

  2. 4.2 (உறவு, நட்பு போன்றவற்றில்) ஒருவரைச் சேர்க்காமல் வேறுபடுத்துதல்; ஒதுக்குதல்

   ‘என் வீடு, உன் வீடு என்று நீதான் பிரிக்கிறாய். நாங்கள் அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை’

  3. 4.3இலங்கைத் தமிழ் வழக்கு வகுத்தல்

   ‘பத்தை இரண்டால் பிரித்தால் விடை ஐந்து’

பிரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிரி1பிரி2பிரி3

பிரி3

பெயர்ச்சொல்

 • 1

  (கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல்.

 • 2

  (கயிறு முதலியவற்றில்) முறுக்கப்பட்ட இழைத் தொகுதி.

  ‘மூன்று பிரி சணல்’
  ‘ஐந்து பிரி சணல்’