பெறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெறு1பெறு2

பெறு1

வினைச்சொல்பெற, பெற்று

 • 1

  (கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்; (குழந்தையை) உடையவராக இருத்தல்.

  ‘ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்று நான் தீர்மானித்துவிட்டேன்’
  ‘உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை மறந்துவிடாதே!’

 • 2

  ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.

  ‘நகை திருடியவர் சிறைத் தண்டனை பெற்றார்’
  ‘மனம் அமைதி பெறவில்லை’
  ‘விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை டெரஷ்கோவா பெற்றார்’
  ‘அரசியல் உலகில் இந்தக் கட்சி பெற்றிருக்கும் முக்கியத்துவம்தான் என்ன?’
  ‘வேம்பு பல நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் பெற்றது’
  ‘நீங்கள் பங்குகொண்டால்தான் கூட்டம் முழுமை பெறும்’
  ‘மக்களிடையே நன்மதிப்பு பெற்ற நிறுவனம் எங்களுடையது’
  ‘முற்காலத்தில் வணிகம், விவசாயம் போன்ற துறைகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றிருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன’
  ‘பதம் பாடுவதில் இவர் மிகுந்த பயிற்சி பெற்றவர்’
  ‘புத்தர் போதி மரத்தின் அடியில் ஞானம் பெற்றார்’

 • 3

  (கொடுக்கப்படும் ஒன்றை அல்லது முயற்சி செய்து ஒன்றை) வாங்குதல்.

  ‘அவரிடம் நான் கொடுத்து அனுப்பிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டாயா?’
  ‘மேலிடத்திலிருந்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும்’
  ‘திருமணத்திற்கு என் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவதற்குப் பெரும்பாடு பட வேண்டியதாயிற்று’
  ‘தமிழ்ப் பாடத்தில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவி இவர்’
  ‘இது தேசிய விருது பெற்ற திரைப்படம்’
  ‘ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற வீரருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது’
  ‘‘அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று கதவின் மேல் எழுதியிருந்தது’
  ‘ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்’
  ‘இவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்’

 • 4

  குறிப்பிட்ட விலையை அல்லது மதிப்பை உடையதாக இருத்தல்.

  ‘இன்றைய நிலவரப்படி அவர் வீடு ஐம்பது லட்ச ரூபாய் பெறும்’
  ‘கால் காசு பெறாத விஷயத்துக்குப் போய் ஒரு சண்டையா?’

பெறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெறு1பெறு2

பெறு2

துணை வினைபெற, பெற்று

 • 1

  ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் இணைந்து ‘படு’ என்ற பொருளில் செயப்பாட்டு வினையாக்கும் துணை வினை.

  ‘இந்தக் கடிதத்துடன் கட்டுரையின் நகல் இணைக்கப்பெற்றுள்ளது’
  ‘அவர் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பெற்றது’

 • 2

  அடைதல், அமைதல் ஆகிய நிலைகளைக் குறிக்கும் வினைகளுடன் இணைந்து அந்த நிலை எவரிடம் அல்லது எங்கே காணப்படுகிறது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன்’
  ‘மதிப்புரைக்கு அனுப்பிய நூல்கள் வரப்பெற்றோம்’
  ‘இந்த மருத்துவமனை நவீன வசதிகள் அனைத்தும் அமையப்பெற்றது’