தமிழ் வளம் யின் அர்த்தம்

வளம்

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் இயற்கைப் பொருள்கள், இயற்கைச் சக்திகள், மனித ஆற்றல், தொழில், செல்வம் போன்றவை.

  ‘எண்ணெய் வளம் மிக்க நாடு’
  ‘தென் அமெரிக்கா இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு கண்டம்’
  ‘நம் நாட்டின் நீர் வளத்தையும் நில வளத்தையும் நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை’
  ‘தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருவதால் உலகில் கனி வளங்கள் நாளுக்கு நாள் குறைந்துவருகின்றன’
  ‘வன வளம் கெடுவது மழைப் பொழிவைப் பாதிக்கும்’

 • 2

  (நிலம்) பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலையையும் கனிமச் சத்துகளையும் கொண்ட தன்மை.

  ‘ரசாயன உரங்களால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது’
  ‘வளமான நிலங்கள்’

 • 3

  (கலை, பண்பாடு, இலக்கியம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) சிறப்பான தன்மை, கூறுகள் போன்றவை.

  ‘சங்க இலக்கிய மரபு வளமான இலக்கிய மரபாகும்’
  ‘புதுச் சொல்லாக்கம் மொழியின் வளத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்’

 • 4

  குறிப்பிடப்படும் ஒன்று சிறப்பாகவும் நிறைவாகவும் காணப்படும் தன்மை; செழுமை.

  ‘கவிதையில் காணப்படும் கற்பனை வளம்’
  ‘குரல் வளம் மிக்க பாடகர்’

 • 5

  எல்லாச் சிறப்புகளும், வசதிகளும் பெற்றிருக்கும் மேம்பட்ட நிலை.

  ‘‘வளமுடன் வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்தினார்’
  ‘உங்கள் குழந்தை வளமாக வாழ இன்றே சேமிக்கத் துவங்குங்கள்’
  ‘இளைஞர்களான உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது’