தமிழ் வாழ் யின் அர்த்தம்

வாழ்

வினைச்சொல்வாழ, வாழ்ந்து

 • 1

  உயிருடன் இருந்து இயங்குதல்.

  ‘சில வகைக் கடல் ஆமைகள் இருநூறு ஆண்டுகள்வரை வாழ்கின்றன’
  ‘மனிதன் சராசரியாக நூறு ஆண்டுகள் வாழ முடியும்’
  ‘தவளை நிலத்திலும் நீரிலும் வாழக் கூடியது’

 • 2

  (குறிப்பிட்ட முறையில்) வாழ்க்கை நடத்துதல்.

  ‘இப்படி நாடோடிகளாக எவ்வளவு காலம் வாழ்வது?’
  ‘இப்படியே சாகும்வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட மாட்டோமா என்று நினைத்தார்’
  ‘இவர்கள் விறகு வெட்டிக் கிடைக்கும் வருமானத்தை வைத்து மட்டுமே வாழ்ந்துவருகிறார்கள்’

 • 3

  (ஓர் இடத்தில்) வசித்தல்.

  ‘அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலர் கூட்டுசேர்ந்து இந்த மருத்துவமனையைக் கட்டுகிறார்கள்’
  ‘நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் நகரம்’

 • 4

  (கணவனைக் குறித்துவரும்போது மனைவியுடன் அல்லது மனைவியைக் குறித்து வரும்போது கணவனுடன்) சேர்ந்திருந்து குடும்பம் நடத்துதல்.

  ‘‘அந்தக் கொடுமைக்காரனுடன் வாழ்வதைவிட நான் தனியாகவே இருந்துவிடுகிறேன்’ என்றாள் என் அக்கா’
  ‘கட்டிய மனைவியோடு ஒழுங்காக வாழத் தெரியாமல் இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறான்’

 • 5

  பேச்சு வழக்கு (அஃறிணை ஒருமை முற்று வடிவம் மட்டும், எதிர்மறைத் தொனியில்) சிறப்பாக இருத்தல் அல்லது தேவைப்படுதல்.

  ‘உன் தம்பி வீட்டில் மட்டும் என்ன வாழ்கிறது. சோற்றுக்கே திண்டாட்டம்’
  ‘கையில் காசு இல்லை. பிறகு அலங்காரம் என்ன வாழ்கிறது?’

தமிழ் வாழ் யின் அர்த்தம்

வாழ்

பெயரடை

 • 1

  (குறிப்பிட்ட இடத்தில் அல்லது பகுதியில்) வசிக்கும்.

  ‘அமெரிக்காவாழ் இந்தியர்’
  ‘இலங்கைவாழ் தமிழர்’
  ‘குடிசைவாழ் மக்கள்’