விடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடு1விடு2விடு3

விடு1

வினைச்சொல்விட, விட்டு, விடுக்க, விடுத்து

 • 1

  (போகச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (சேர்ந்திருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒரு பொருள்) பிரிந்துபோதல்

   ‘சட்டைப் பையில் தையல் விட்டுவிட்டது’
   ‘வலியில் இடுப்பு விட்டுவிடும்போல் இருக்கிறது’
   உரு வழக்கு ‘வேலை போனதிலிருந்து எனக்கு மனது விட்டுப்போய்விட்டது’

  2. 1.2 (பிடியைத் தளர்த்துவதன்மூலம் ஒன்று அல்லது ஒருவர்) பிரிந்தோ விலகியோ செல்லுமாறு செய்தல்

   ‘தும்பை விட்டதும் கன்றுக்குட்டி தாயிடம் ஓடிற்று’
   ‘கூட்டம் அதிகமாக இருப்பதால் கையைப் பிடித்துக்கொள், விட்டுவிடாதே!’
   ‘என் சட்டையை விடு, கசங்கிவிடப்போகிறது’

  3. 1.3 (ஒன்றின் வழியாக அல்லது ஒன்றின் உள்ளே வேறொன்றை) போகச் செய்தல்; நுழைத்தல்

   ‘சாக்கடை அடைத்திருக்கிறது, குச்சியை விட்டுக் குத்து./ ’
   ‘நீருக்கு அடியில் கையை விட்டுப் பார்த்ததில், கரண்டி அகப்பட்டது’
   ‘வேலியில் இருந்த சிறு திறப்பினுள் ஆடு தலையை விட்டுப்பார்த்தது’
   ‘கூடைக்குள் கையை விடாதே’
   ‘தன்னுடைய சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்’
   ‘குண்டானுக்குள் நாய் தலையை விட்டுவிட்டது’

  4. 1.4 (குழாய், ஆறு முதலியவற்றிலிருந்து பயன்பாட்டுக்குக் கிடைக்கும் விதத்தில் தண்ணீர் போன்றவற்றை) வரச்செய்தல்

   ‘அடுத்த வாரம் முதல் பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் விடப்படும்’
   ‘இங்கு சாயங்கால நேரங்களில் மட்டுமே குழாயில் தண்ணீர் விடுவார்கள்’

  5. 1.5 (தரையில், நீரில், காற்றில் ஒன்று) செல்லுமாறு செய்தல்/(ஒன்றை) செலுத்துதல்; ஓட்டுதல்

   ‘ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டுவந்து கிணற்றில் விட்டேன்’
   ‘காசியில் இறந்தவர்களை எரித்து எலும்பை கங்கையில் விடுகிறார்கள்’
   ‘இரு நாட்டு அதிபர்களும் சமாதானத்திற்கு அடையாளமாகப் புறாக்களைக் வானத்தில் விட்டார்கள்’
   ‘தரையில் விட்டதும் நாய் வேகமாகக் கொல்லைப்புறம் நோக்கி ஓடியது’
   ‘இந்த வேலைக்கு விசைப்படகு விடத் தெரிந்திருக்க வேண்டும்’
   ‘பதினைந்து வயது பையன் எப்படிக் கார் விடுகிறான், பார்!’
   ‘தந்திக் கம்பிகள் இருக்கும் இடத்தில் பட்டம் விடாதே’
   ‘சைக்கிளைக் கொண்டுபோய் வேலியில் விட்டாயா?’

  6. 1.6 (போக்குவரத்தில் வாகனங்களை) ஈடுபடுத்துதல்

   ‘குடியரசு தினத்தை ஒட்டி அதிகப் பேருந்துகள் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது’
   ‘நகரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்துகள் விடப்பட்டன’
   ‘புதிதாகப் பத்து ரயில்களை விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது’

  7. 1.7 (ஓர் இடத்துக்கு ஒன்றை அல்லது ஒருவரை) அனுப்புதல்

   ‘அவருக்குச் சேதி சொல்ல ஆட்களை விட்டிருக்கிறேன், நிச்சயம் வருவார்’
   ‘உன் அண்ணன் உன்னைத் தூது விட்டிருக்கிறானா?’

  8. 1.8 (ஒன்றினுள் அல்லது ஒன்றின் மேல் திரவத்தை) ஊற்றுதல்

   ‘காதில் மருந்தை விட்ட பிறகுதான் காது வலி கொஞ்சம் நின்றிருக்கிறது’
   ‘கோயில் பூசாரி விளக்குக்கு எண்ணெய் விட்டார்’
   ‘செடிக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீர் விடு’
   ‘சாதத்திற்குக் குழம்பு விடவா, ரசம் விடவா?’
   ‘சிறிது புளித்த மோரை விட்டால் தோசை புளிப்பாக இருக்கும்’

  9. 1.9 (அம்பு) எய்தல்

   ‘அர்ஜுனனைக் காட்டிலும் அற்புதமாக அம்பு விடும் இவன் யார் என்று துரோணாச்சாரியார் வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்’

  10. 1.10 (அறை, குத்து, உதை போன்றவை) கொடுத்தல்

   ‘அவன் வயிற்றில் இரண்டு குத்து விட்டேன்’
   ‘தன்னிடம் அசிங்கமாகப் பேசியவனின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்’
   ‘நான் விட்ட உதையில் நாய் சுருண்டு போய் விழுந்தது’

  11. 1.11 (பிடித்து வைத்திருக்கும் ஒருவரை) விடுவித்தல்

   ‘கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது’
   ‘பணயத்தொகையைப் பெற்றுக்கொண்டுதான் தீவிரவாதிகள் நிருபரை விட்டார்கள்’

  12. 1.12 (கொட்டாவி, ஏப்பம் போன்றவற்றை) வெளியேற்றுதல்

   ‘தூக்கத்தால் கொட்டாவி மேல் கொட்டாவியாக விட்டான்’
   ‘நீண்ட பெருமூச்சை விட்டுத் தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்’
   ‘சாப்பிட்டு முடித்ததும் பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார்’
   ‘அப்பா நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்’

  13. 1.13 (இலை, துளிர் முதலியவை) தோன்றுதல்; வெளிவருதல்

   ‘செடி துளிர் விட்டிருக்கிறது’
   ‘ரோஜாச் செடி வேர் விட்டிருக்கிறது’
   ‘நட்டு வைத்த மாங்கொட்டை முளை விட்டிருக்கிறது’
   ‘ஒதிய மரம் நன்றாகக் கிளை விட்டு வளர்ந்திருக்கிறது’

 • 2

  (நிறுத்துதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒரு செயல், நிகழ்வு போன்றவற்றை மேலும் தொடராமல்) நிறுத்துதல்

   ‘புகைபிடிப்பதை விடுவது சிலருக்கு முடியாத காரியம்’
   ‘இவ்வளவு ஏற்பாடுகள் செய்த பிறகு இந்தத் திட்டத்தை விடுவது எனக்கு நன்றாகப் படவில்லை’
   ‘அவள் முடிக்காமல் விட்ட வாசகத்தின் அர்த்தம் என்ன?’
   ‘வேலையை விட்டுவிடுவது பற்றி அப்பாவிடம் சொல்வது என்கிற முடிவுக்கு வந்தான்’
   ‘அவனை இப்போது கண்டிக்காமல் விட்டால் பிறகு பெரியபெரிய திருட்டு வேலைகள் செய்வான்’
   ‘எட்டாம் வகுப்போடு படிப்பை விட்டுவிட்டான்’
   ‘கடிதத்தை விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுதத் தொடங்கினான்’
   ‘அவர் இன்னும் தற்பெருமையை விடவே இல்லை போலிருக்கிறதே!’

  2. 2.2 (ஒன்றை) தவிர்த்தல்; ஒதுக்குதல்

   ‘அவரை விட்டால் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை’
   ‘இந்த இடத்தை விட்டால் வேறு நல்ல இடம் எதுவும் கிடைக்காது’
   ‘பல விஷயங்களையும் நூலாசிரியர் விளக்காமலேயே விட்டுவிடுகிறார்’

  3. 2.3 (ஒன்று) முடிவுக்கு வருதல்; நிற்றல்

   ‘மழை விட்டுவிட்டது’
   ‘குழந்தைக்கு இன்னும் ஜூரம் விடவில்லை’
   ‘என் பையன் பள்ளி விட்டதும் நேராக வீட்டுக்கு வந்துவிடுவான்’
   ‘அவன் படம் விட்டதும் பக்கத்திலிருந்த ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டான்’
   ‘அலுவலகம் விட்டதும் நான் அம்மாவைப் பார்க்கப்போனேன்’

 • 3

  (இருக்கச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில்) இருக்கச் செய்தல்

   ‘குழந்தையை மெதுவாக எடுத்துப் படுக்கையில் விடு’
   ‘செருப்பை எங்கே விடுவது?’
   ‘திருடனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டனர்’
   ‘பாட்டியை வீட்டில் தனியாக விட்டுவிட்டா வந்தாய்?’
   ‘மழை பெய்யாத காரணத்தால் இந்த நிலங்கள் தரிசாக விடப்பட்டன’
   ‘அம்மா இறந்தபின் அவன் தனிமையில் விடப்பட்டான்’

  2. 3.2 (ஒன்றில்) மீதம் இருக்கச் செய்தல்

   ‘தொட்டித் தண்ணீர் முழுவதையும் நீங்களே எடுத்துக்கொள்ளாதீர்கள், எனக்கும் கொஞ்சம் விடுங்கள்’

  3. 3.3 (ஒரு பரப்பு, பொருள் முதலியவற்றில் விரிசல், தெறிப்பு போன்றவை) தோன்றுதல் அல்லது ஏற்படுதல்

   ‘சுவரில் விரிசல் விட்ட இடங்களைப் பூச வேண்டும்’
   ‘அண்டாவின் அடியில் தெறிப்பு விட்டிருக்கிறது’

  4. 3.4 (ஒன்று) குறிப்பிட்ட இடைவெளியில் இருக்குமாறு அல்லது தள்ளி இருக்குமாறு செய்தல்

   ‘நுனியிலிருந்து ஆறு அங்குலம் விட்டுக் கயிற்றில் முடிச்சுப் போட்டான்’
   ‘கொஞ்சம் இடம் விட்டு உட்கார்’
   ‘முதல் முடிச்சுக்கு முன்னால் கொஞ்சம் தாராளமாகக் கயிறு விடப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்’
   ‘தென்னங்கன்றுகள் நடுவதற்காக வீட்டின் பக்கவாட்டில் இடம் விடப்பட்டுள்ளது’

  5. 3.5 (விடுமுறை) தருதல்

   ‘தொடர் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது’

 • 4

  (பிற வழக்கு)

  1. 4.1 (அறிக்கை, அறிவிப்பு முதலியவற்றை) வெளியிடுதல்; அனுப்புதல்

   ‘பெட்ரோல் விலை உயரும் என்கிற வதந்தியை மறுத்து அரசு அறிக்கை விட்டிருக்கிறது’
   ‘என்னிடமே சவால் விடுகிறாயா?’
   ‘புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது’
   ‘கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு விட்டிருக்கிறார்கள்’

  2. 4.2 (ஒன்றைச் செய்ய) அனுமதித்தல்

   ‘உன்னை உள்ளே விட முடியாது’
   ‘என்னைப் பேச விடுங்கள்’
   ‘கொசு தூங்க விடவில்லை’
   ‘அவரவர் விருப்பத்திற்கேற்ப விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?’
   ‘வரிசைப்படிதான் ஆட்களை உள்ளே விடுகிறார்கள்’

  3. 4.3 (ஒரு பொறுப்பு, வேலை போன்றவற்றை ஒருவரிடம்) ஒப்படைத்தல்; தருதல்

   ‘நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடலாம்’
   ‘அந்த வேலையை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள்’
   ‘இளவரசன் மந்திரியின் பாதுகாப்பில் விடப்பட்டான்’
   ‘தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 98 அங்கத்தினர்கள் மட்டுமே அதை ஆதரித்தனர்’
   ‘இந்தத் தீர்மானம் செயற்குழு உறுப்பினர்களிடம் பரிசீலனைக்கு விடப்பட்டிருக்கிறது’

  4. 4.4 (வாடகை, குத்தகை, வட்டி போன்றவை பெறும் வகையில் ஒன்றின் பொறுப்பை ஒருவரிடம்) கொடுத்தல்

   ‘மாநகராட்சி புளியமரங்களைக் குத்தகைக்கு விட்டுள்ளது’
   ‘எங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதாக இல்லை’
   ‘நிலவரி வசூல் செய்யும் பணி அந்தக் காலத்தில் ஜமீன்தார்களிடம் விடப்பட்டது’
   ‘தன்னிடம் இருந்த பணத்தை அதிக வட்டிக்கு வெளியில் விட்டிருக்கிறான்’

  5. 4.5 (நோய், குணம் போன்றவை ஒருவரிடமிருந்து) நீங்குதல்

   ‘ஜலதோஷம் என்னை விடுவதாக இல்லை’
   ‘சந்தேகப்புத்தி உன்னை விடவே விடாதா?’
   ‘நகை மோகம் அவளை விட்ட பாடில்லை’
   ‘இந்த முன்கோபம் உன்னை என்று விடுகிறதோ அப்போதுதான் நீ மனிதனாவாய்’
   ‘பழக்கதோஷம் விடவில்லை’

  6. 4.6 (ஒன்றை) தவறவிடுதல்; தொலைத்தல்

   ‘பெட்டியை எங்கேயோ விட்டுவிட்டு இங்கே வந்து தேடுகிறான்’
   ‘ரயிலில் பணத்தை விட்டுவிட்டாயா?’

விடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடு1விடு2விடு3

விடு2

துணை வினைவிட, விட்டு, விடுக்க, விடுத்து

 • 1

  செயலின் முடிவை உறுதிப்படுத்துதல் அல்லது நிச்சயப்படுத்துதல் என்ற முறையில் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘ஆறு மாதத்தில் நீ மிகவும் வளர்ந்துவிட்டாய்’
  ‘உட்காருங்கள், அவர் வந்துவிடுவார்’
  ‘இந்த மருந்தைக் குடித்துவிடு’
  ‘விக்கல் வந்தது, நெஞ்சைத் தடவிவிட்டேன்’
  ‘குழந்தைக்குச் சட்டை போட்டுவிட்டேன்’
  ‘தாத்தாவை வண்டியில் ஏற்றிவிட்டு வா’
  ‘தோட்டத்தில் புகுந்த மாட்டின் மேல் அவர் நாயை ஏவிவிட்டார்’
  ‘என் காலைக் கொஞ்சம் பிடித்துவிடு’

விடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடு1விடு2விடு3

விடு3

வினைச்சொல்விட, விட்டு, விடுக்க, விடுத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள், அழைப்பு முதலியவற்றை) சென்றடையச் செய்தல்; கொடுத்தல்; வெளியிடுதல்.

  ‘எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே இந்த ஊர்வலம்’
  ‘ஒத்துழைப்புத் தருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்’

 • 2

  உயர் வழக்கு (ஒன்றை) விலக்குதல் அல்லது ஒதுக்குதல்.

  ‘பற்றை விடுப்பது எளிதான செயலா?’
  ‘எதற்காக வந்தோமோ அதை விடுத்து வேறு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்’