தமிழ் வே யின் அர்த்தம்

வே

வினைச்சொல்வேக, வெந்து

 • 1

  (உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி, இறைச்சி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல்.

  ‘உருளைக்கிழங்குகளை வேகப் போட்டுவிட்டேன்’
  ‘வடை இன்னும் கொஞ்சம் வேகட்டும்’
  ‘மூடியைத் திறந்து இட்லி வெந்திருக்கிறதா பார்!’
  ‘கறியை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்’
  ‘தோசை ஒரு பக்கம் மட்டுமே வெந்திருந்தது’
  ‘ஜாங்கிரியை ரொம்ப வேகவிடாமல் முறுகலாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும்’
  ‘வேகவைத்த துவரம்பருப்பை மசித்துக்கொள்ளவும்’

 • 2

  (வெப்பத்தினால்) புழுக்கம் ஏற்படுதல்; புழுங்குதல்.

  ‘கோடைக் காலம் முடிந்த பிறகும் இப்படி வேகிறதே’

 • 3

  (வெந்நீர் பட்டு அல்லது நெருப்பால் சுடப்பட்டு) புண்ணாதல்; சதை கருகுதல்.

  ‘வெந்நீர் கொட்டிக் கால் வெந்துவிட்டது’
  ‘தீ விபத்தில் சிக்கி உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்’

 • 4

  (உஷ்ணம் காரணமாக வாய், வயிறு போன்றவை) புண்ணாதல்.

  ‘எனக்கு வாய் வெந்துபோயிருப்பதால் காரமாக எதையும் சாப்பிட முடியாது’