தமிழ் -ஆக யின் அர்த்தம்

-ஆக

இடைச்சொல்

 • 1

  ஒரு பெயர்ச்சொல்லை வினையடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘குழந்தை அழகாகச் சிரிக்கிறது’
  ‘வேகமாக வா’

 • 2

  ஒரு தொடரை வினையடை ஆக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘மகன் வெளிநாடு செல்வதாகக் கனவு கண்டார்’
  ‘அவர் எனக்குப் பணம் தருவதாகச் சொன்னார்’

 • 3

  ஒரு வாக்கியத்தில் எழுவாயின் தன்மை, நிலைமை போன்றவற்றைக் குறிக்கும் சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘அவன் சிறந்த வீரனாக விளங்குகிறான்’

 • 4

  ‘போல்’ என்ற ஒப்புமைப் பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இட்லி கல்லாக இருக்கிறது’
  ‘கவலைகள் இல்லாமல் மனம் பஞ்சாக இருந்தது’
  ‘அவன் புலியாகப் பாய்ந்தான்’
  ‘என்னை நிழலாகத் தொடர்ந்தாள்’

 • 5

  நான்காம் வேற்றுமை உருபுடன் இணைந்து ‘பொருட்டு’, ‘காரணமாக’ என்ற பொருளைத் தரும் இடைச்சொல்.

  ‘உனக்காக இந்த உதவியைச் செய்கிறேன்’
  ‘அவன் செய்த சிறு தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?’

 • 6

  பிறரின் தூண்டுதல் இல்லாமல் கர்த்தாவே தன்னிச்சையாகச் செயல்படுவது என்ற பொருளைத் தரப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘நான் கேட்கவில்லை, அவராகக் கொடுத்தார்’
  ‘தானியங்கி இயந்திரம் என்பதால் அது தானாகவே நின்றுவிடும்’

 • 7

  ஒரு செயல் தொடர்ந்தும் மிகுதியாகவும் நிகழ்கிறது என்ற பொருளைக் காட்டும் இடைச்சொல்.

  ‘அவள் சேலைசேலையாகப் புரட்டிப் பார்த்தாள்’
  ‘அவருக்குக் கோபம்கோபமாக வந்தது’
  ‘சரியான முகவரி தெரியாமல் தெருவில் வீடுவீடாக ஏறி இறங்கினான்’

 • 8

  வாழ்த்து, வசை முதலியவற்றைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் ஜெபிக்கப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக!’
  ‘‘நீ புழுவாய்ப் பிறப்பாயாக!’ என்று சபித்தார்’