தமிழ் -ஆவது யின் அர்த்தம்

-ஆவது

இடைச்சொல்

 • 1

  குறிப்பிடும் ஒன்றைக் குறைந்தபட்சமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்துடனோ வற்புறுத்தலுடனோ குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவராவது உன் வீட்டுக்கு வந்திருக்கலாம்’
  ‘நீயாவது அவனுக்குச் சொல்லக் கூடாதா?’
  ‘இனிமேலாவது ஒழுங்காகப் படிக்க முயற்சி செய்’
  ‘இந்தக் கஞ்சியையாவது குடி’
  ‘நான் தரும் பணத்தையாவது வாங்கிக்கொள்’
  ‘தலையையாவது சீவிக்கொள்ளக்கூடாதா?’
  ‘நீயாவது திருமணத்திற்கு வருவாயா?’

 • 2

  ஒரு செயலை நிறைவேற்றக் குறிப்பிட்ட மற்றொன்றைச் செய்யத் தயக்கம் இல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘உயிரைக் கொடுத்தாவது நாட்டைக் காப்போம்’
  ‘அடகு வைத்தாவது உனக்குப் பணம் தருகிறேன்’
  ‘ஒன்றும் இல்லாவிட்டால் சோறு வைத்தாவது சாப்பிட்டுக்கொள்ளலாம்’

 • 3

  வினாப்பெயர் இடம்பெறும் வாக்கியத்தில் வினாப்பெயரோடு இணைந்து அதன் வினாப்பொருளின் இயல்பை நீக்கும் இடைச்சொல்.

  ‘யாராவது இங்கே சீக்கிரம் வாருங்கள்’
  ‘ஏதாவது சாப்பிடக் கொடு’
  ‘எங்காவது போய்க் கேள்’
  ‘என்றைக்காவது ஒரு நாள் வேலை கிடைக்கும்’

 • 4

  ஒரு வாக்கியத்தின் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர் அல்லது வினைச்சொற்கள் இடம்பெறும்போது ‘ஒன்றுக்கு மாற்றாக ஒருவரோ ஒன்றோ’ என்ற பொருளைக் குறிக்க அவற்றோடு சேர்க்கப்படும் இடைச்சொல்; ‘அல்லது’.

  ‘நீயாவது உன் தம்பியாவது நாளை என் வீட்டுக்கு வர முடியுமா?’

 • 5

  ஒருவரின் அல்லது ஒன்றின் செயல்பாட்டின் மேல் தனக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப்படுத்த எழுவாயுடனும் பயனிலையுடனும் இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘அவராவது, இவ்வளவு பணம் கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்குவதாவது’
  ‘இந்தக் கத்தியாவது வெட்டுவதாவது’
  ‘இந்த மருந்தாவது இந்த ஊரில் கிடைப்பதாவது’

 • 6

  ஒன்று ஒரு வரிசையில் அமைந்திருக்கும் நிலையைக் காட்டுவதற்குக் குறிப்பிட்ட எண்ணுப்பெயரோடு இணைக்கப்பட்டு மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘இரண்டாவது பக்கம்’
  ‘10வது வட்டத்தின் செயலாளர்’

 • 7

  குறிப்பிடப்பட்டது ‘இன்னது’ என்ற பொருளில் வாக்கியத்தின் இரண்டு பகுதிகளைத் தொடர்புபடுத்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘இந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது...’
  ‘நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமாவது...’

 • 8

  ‘கூடாது’, ‘முடியாது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இதற்கு மேலும் அவனை விட்டுவைப்பதாவது?’
  ‘பகல் முழுக்கப் பட்டினி கிடப்பதாவது?’
  ‘அவனுக்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டார். இதற்கு மேலும் பணம் கொடுப்பதாவது?’

 • 9

  ஒன்று முக்கியமற்றது என்று குறிப்பிடுவதற்குப் பெயர்ச்சொற்களோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘பாவமாவது, புண்ணியமாவது! இந்தக் காலத்தில் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்?’
  ‘இலக்கியமாவது, மண்ணாவது! எனக்கு இதெல்லாம் வேண்டாம்’
  ‘பாட்டாவது, கூத்தாவது! அதற்கெல்லாம் ஏது நேரம்?’