தமிழ் -உம் யின் அர்த்தம்

-உம்

இடைச்சொல்

 • 1

  பெயர்ச்சொற்களையோ வினையடைகளையோ தொழிற்பெயர்களையோ பட்டியலிட்டுக் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘என் மகனும் மருமகளும் நாளை வருகிறார்கள்’
  ‘குழந்தைகள் ஆடியும் பாடியும் மகிழ்ந்தார்கள்’
  ‘அவரைச் சந்திக்கவும் பாராட்டவும் விரும்புகிறேன்’
  ‘மற்றவர்கள் வாழ்த்தினாலும் திட்டினாலும் அவர்களுக்குக் கவலை இல்லை’
  ‘படிப்பதும் விவாதிப்பதும் அவருக்குப் பிடிக்கும்’

 • 2

  ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு மாற்றாக மற்றொன்று அல்லது மற்றொருவர் இருப்பதை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘குன்றில் உள்ள கோயிலுக்கு நடந்தும் போகலாம்’
  ‘மதுரைக்குப் பேருந்திலும் போகலாம்’
  ‘இந்த வேலைக்கு அவரையும் கூப்பிடலாம், அவர் தம்பியையும் கூப்பிடலாம்’

 • 3

  தற்போது குறிப்பிடுவது ஏற்கெனவே உணர்த்தப்பட்டதை ஒத்திருக்கிறது என்பதைக் கூறப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘கூட’.

  ‘உனக்கு மட்டுமல்ல, எனக்கும் வயதாகிறது’
  ‘அவரும் திருமணத்திற்கு வந்திருந்தார்’
  ‘என்னாலும் தேர்வு எழுத முடியவில்லை’

 • 4

  இறந்தகாலத் தொழிற்பெயரோடு இணைக்கப்படும்போது ‘செயல் நிகழ்ந்தவுடன்’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘உடன்’.

  ‘வந்ததும் ஏன் கிளம்புகிறாய்?’
  ‘காலையில் எழுந்ததும் பல் துலக்கு’

 • 5

  ஒரே வினைச்சொல்லின் ‘–ஆல்’ ஈற்று வினையெச்சமும் வினைமுற்றும் இணைந்து வரும் வாக்கியத்தில் வினையெச்சத்தின் பின் இணைக்கப்படும்போது ஒரு செயல் நிகழ்வதற்கும் நிகழாமல் இருப்பதற்கும் சாத்தியம் உண்டு என்பதை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘இந்த வாரம் அவர் வந்தாலும் வரலாம்’
  ‘நீங்கள் சொல்வது போல நடந்தாலும் நடக்கலாம்’

 • 6

  ஒரு வாக்கியத்தில் உள்ள (‘ஏன்’ தவிர்ந்த) வினாப் பெயரோடு சேரும்போது ‘விடுபாடே இல்லாமல்’ (எப்போதும்/யாரும்/எவரும்) என்ற பொருளை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘காற்று எங்கும் நிறைந்திருக்கிறது’
  ‘எப்போதும் அவன் வேடிக்கையாகப் பேசுவான்’
  ‘இன்றிரவு என்னமும் நடக்கலாம்’
  ‘அவர் என்னவும் பேசி விட்டுப்போகட்டும்’

 • 7

  ஒன்றுகூட்டிக் கூறும் எண்ணுப்பெயரோடும் ‘அனைத்து’, ‘எல்லா’ முதலிய சொற்களோடும் இணைக்கப்படும்போது ‘விடுபாடே இல்லாமல்’ என்ற பொருளை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘நண்பர்கள் மூன்று பேரும் என் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்’
  ‘கண்டங்கள் ஏழையும் வரைபடத்தில் குறிக்கவும்’
  ‘கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கின்றன’
  ‘எல்லா மாடுகளும் வீடு திரும்பின’

 • 8

  வினையடையுடன் இணைக்கப்படும்போது அதன் பொருளை உறுதிப்படுத்தவோ மிகுவிக்கவோ பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவன் திரும்பவும் வந்தான்’

 • 9

  ஒருவருடைய செயல், உணர்வு முதலியவற்றைக் குறித்த சலிப்பையும் அலட்சியத்தையும் வெளிப்படுத்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘நீயும் உன் இலக்கியமும்!’
  ‘நீயும் உன் காதலும்!’

 • 10

  விதிநிலை அமையப்பெற்றாலும் உரிய விளைவு இருக்காது என்னும் எதிர்மறைப் பொருளைத் தர –ஆல் ஏற்ற வினையெச்சத்துடன் இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘எவ்வளவு தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை’
  ‘நீ போய்க் கேட்டாலும் அவன் கொடுக்கமாட்டான்’
  ‘இந்தக் கட்டுரையைப் பல முறை திருப்பி எழுதியும் சரியாக வரவில்லை’
  ‘அவன் ஊருக்கு வந்தும் என்னைப் பார்க்கவில்லை’